ஆட்டோ ஓட்டுநரின் மகள் உலகின் நெம்பர் ஒன் சாம்பியன்… இந்திய வில்வித்தையில் புது புயல்!
- IndiaGlitz, [Tuesday,June 29 2021]
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி எனும் 3 பிரிவுகளிலும் கலந்து கொண்டு தங்கத்தை குவித்து இருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி. அதிலும் குறிப்பாக ஒற்றையர் பிரிவில் தங்கத்தை வென்றதால் தற்போது உலகத்தின் நெம்பர் ஒன் வீராங்கனை எனும் அந்தஸ்துக்கு உயர்ந்து இருக்கிறார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் பிறந்தவர்தான் தீபிகா குமாரி. இவரின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது தாய் ஒரு செவிலியராக பணியாற்றி வருகிறார். சிறு வயதில் உறவுக்காரப் பெண் ஒருவரிடம் இருந்து மாங்காய் கொட்டைகளை வைத்து வில்வித்தை செய்யக் கற்றுக்கொண்ட இவர் நாளடைவில் வில்வித்தை மீது தீராதக் காதல் கொண்டு மூங்கில் வில் அம்புகளை வைத்து பயிற்சி பெற்று இருக்கிறார்.
இவரது ஆர்வத்தைப் பார்த்த பெற்றோர் முறையான பயிற்சி வழங்குவதற்காக கடும் சிரமப்பட்டு உள்ளனர். ஒருவழியா கடந்த 2005 வாக்கில் அர்ஜுன் வில்வித்தை பயிற்சி மையத்திலும் பின்பு டாடா வில்வித்தை பயிற்சி மையத்திலும் பயிற்சி எடுத்து இருக்கிறார். இதற்கிடையில் வீட்டிற்கே செல்லாத தீபிகா கடந்த 2009 இல் உலகக் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்ற பிறகே வீட்டிற்கு திரும்பினாராம்.
இப்படி வில்வித்தையில் தீவிர ஆர்வம் கொண்ட தீபிகா கடந்த 2010 காமன்வெல்த், ஆசிய விளையாட்டுகள், ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல எனப் பல்வேறு பதக்கங்களைக் குவித்து உள்ளார்.
ஆனால் 2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக்கில் என இரண்டிலும் சொதப்பிய தீபிகா அடுத்து வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் இவர்மீது அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
Deepika Kumari ???? takes gold in Paris! ?????? #ArcheryWorldCup pic.twitter.com/0ZIxSceCFs
— World Archery (@worldarchery) June 27, 2021