அதிமுக கூட்டணியில் இணையாதது ஏன்? ஜெ.தீபா பேட்டி
- IndiaGlitz, [Friday,March 15 2019]
அதிமுக, திமுக, தினகரன் கட்சி, கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி என ஐந்து முனை போட்டி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உருவாகியுள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.தீபா, 'அதிமுக கூட்டணியில் இணைய அல்லது அதிமுகவுடன் தனது கட்சியை இணைக்க கடந்த மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாகவும் தீபா தெரிவித்தார்.
மேலும் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், கள ஆய்வு செய்த பின்னரே போட்டியிடுவது குறித்த முடிவை எடுக்கவுள்ளதாகவும், ஆனால் தனது கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழக மக்களும் இளைஞர்களும் புதியதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சி அதிகம் இருப்பதை தான் பல இடங்களில் பார்த்ததாகவும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தீபா தெரிவித்துள்ளார்.