புதிய அரசு பொறுப்பேற்றவுடன் புதிய கோரிக்கை: திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்
- IndiaGlitz, [Tuesday,April 20 2021]
புதிய ஆட்சி அமைந்தவுடன் திரையரங்குகளுக்கான புதிய கோரிக்கைகள் கேட்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாலை காட்சியும் இரவு 8 மணிக்குள் முடிவடையும் வகையில் காட்சி நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து திரையரங்குகளில் காலை, மதியம், மாலை என மூன்று காட்சிகள் திரையிட முடிவு செய்திருப்பதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் புதிய அரசு உருவான பிறகு இரவு காட்சிகளை மீண்டும் திரையிட கோரிக்கை வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல புதிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் மட்டுமே தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதால் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.