மூணாறு நிலச்சரிவு சம்பவம்- பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்த அவலம்!!!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை அடுத்த ராஜமலா, பெட்டிமாடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 61 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரளாவின் வயநாடு, இடுக்கி, பத்தனம் திட்டா போன்ற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் இடுக்கி மாவட்டத்திலுள்ள பெட்டிமாடா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 61 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் 16 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற 78 பேர் பெட்டிமாடா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தனர் என்றும் அவர்கள் 20 தற்காலிகக் குடியிருப்புகளில் தங்க வைக்கப் பட்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. அப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 தேதி காலை 5 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அவர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாகப் புதைந்து விட்டதாகப் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்டமாக அவர்களை மீட்க வந்த பேரிடர் மீட்புக்குழு 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்டது. அங்கு தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் மற்றவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் கவலை தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில் விபத்து நடந்த 12 ஆம் நாளான இன்று பெட்டிமாடாவை ஒட்டிய கல்லார் ஆற்றின் கரையோரத்தில் 2 பெண்கள் மற்றும் 1 ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தொழிலாளர்கள் தமிழகத்தின் கோவில்பட்டி, ராஜபாளையம், பரமக்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் இருந்து சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.