கோவை 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
- IndiaGlitz, [Friday,December 27 2019]
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கோவையில் கடந்த மார்ச் மாதம் பன்னிமடை என்ற பகுதியில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். அவரை காணாமல் சிறுமியின் பெற்றோர்களும், காவல்துறையினர்களும் தேடிவந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டிற்கு அருகேயே உள்ள முட்டுச்சந்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. இந்த விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சிறுமியின் வீட்டருகே வசித்து வந்த சந்தோஷ்குமார் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இருதரப்பின் நிறைவடைந்து டிசம்பர் 27ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை சந்தோஷ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின்னர் குற்றவாளியின் தண்டனை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
இதன்படி குற்றறவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள்தண்டனையும் 302 பிரிவின்படி மரண தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் இந்த மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.