பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜாக்கள் காலத்து கதைகளில் மரண தண்டனை என்பது சர்வ சாதாரண விஷயமாக இருக்கும். தலையை வெட்டுவது, சீவுவது, உயிரோடு புதைப்பது போன்ற தண்டனைகள் சாதாரண குற்றங்களுக்கும் வழங்கப் படும். காட்டு மிராண்டி காலம் போலவே இன்றைக்கு வளர்ந்து விட்ட ஒரு சமூகத்தில் மரணத் தண்டனைகள் தேவையா என்பது போன்ற எதிர்ப்பு குரல்கள் அவ்வபோது எழுப்பப் படுகிறது. ஆனால் சில சமயங்களில் இப்படி செய்தால் பயம் வரும் என்பது போன்ற ஆதரவு கருத்துக்களும் வலுக்கின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு முறையும் மரண தண்டனை நிறைவேற்றப் படும் போதும் சமூக நல ஆர்வலர்கள் “மரண தண்டனை ஒருபோதும் குற்றங்களைக் குறைப்பதற்கான வழிமுறை இல்லை” என்பதை உறுதியுடன் தெரிவித்து வருவதைப் பார்க்க முடிகிறது. உண்மையில் இந்தியாவில் எந்த குற்றங்களுக்கு எல்லாம் மரண தண்டனை கொடுக்கப் படுகின்றன? உலக நாடுகளில் மரண தண்டனை குறித்த நிலைப்பாடு என்ன? மரண தண்டனைகள், குற்றங்களைக் குறைத்திருக்கிறதா? அல்லது இது மனித உரிமைக்கு எதிரானதாக இருக்கிறதா? என்று பல தரப்பட்ட கேள்விகளுக்கு இன்றளவும் விடை கிடைக்க வில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.
உளவியல் மருத்துவர்கள், அறிஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் பல நேரங்களில் மரண தண்டனைக்கு எதிராகவே தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வந்தாலும் இந்தியாவில் ஒரு சாதாரண பாமரனின் நாடித்துடிப்பு இதிலிருந்து மாறுபட்டு தான் இருக்கிறது. சமீபத்தில் ஹைத்ராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு உயிரோடு எரிக்கப் பட்ட வழக்கின் குற்றவாளிகள் 4 பேர் எண்கவுண்டரில் கொல்லப் பட்டனர். இது பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன.
பாலியல் துன்புறுத்தல்கள் எந்த ஒரு சமூகத்திலும் ஒத்துக் கொள்ள முடியாத மன வருத்தத்தைத் தரும் கொடுமையாக இருக்கிற பட்சத்தில் வழக்கின் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருவதையோ அல்லது விடுதலை அடைவதையோ பொது மக்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. அதே போல தண்டனை நிறைவேற்று வதில் கால தாமதத்தையும் மக்கள் விரும்புவது இல்லை.
நிர்பயா வழக்கில் மரண தண்டனை அளித்து தீர்ப்பு கொடுக்கப் பட்ட வுடன் வீதிகளிலும் சமூக வலைத் தளங்களிலும் பலர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். குற்றவாளிகள் கருணை மனுக்களை அளித்த போது ஒப்புதல் வழங்கக் கூடாது என பலத் தரப்பில் இருந்தும் கேட்டுக் கொள்ளப் பட்டது. அதேபோல தூக்குத் தண்டனை நிறேவேற்றுவதில் ஏற்பட்ட கால தாமத்தை சகித்துக் கொள்ள மாட்டாதவர்களாக மக்கள் உணர்ந்தனர். இத்தகைய மனநிலையைப் பார்க்கும் ஒரு குரூரத் தனத்திற்கு மக்கள் ஆளாகி விட்டார்களோ என்ற சந்தேகம் உளவியல் மருத்துவர்களுக்கு எழுகிறது.
ஆனால் இந்தியாவில் வாழ்கின்ற ஒவ்வொரு சாதாரண பாமரனும் இந்த தீர்ப்பு வரவேற்கப் பட வேண்டியது தான் என்ற ரீதியில் கருத்துத் தெரிவிக்கின்றனர். அடிப்படையில் அசாதாரணமான ஒரு சூழல் உருவாகி உள்ளது போல இந்திய மக்கள் உணர்வதையும் அவ்வபோது பார்க்க முடிகிறது. “பாதுகாப்பு, ஆதித மன அழுத்தம் போன்றவற்றிற்கு ஆளாகும் நேரங்களில் இத்தகைய தீர்ப்புகள் அவர்களை மகிழ்ச்சி படுத்துவது போலவும் அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என உளவியல் மருத்துவர்கள் கூறுவதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.
பெரும்பான்மை
2018 ஆம் ஆண்டு ஐ.நா. சபை தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு வரைவு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. உலக நாடுகள் முழுவதும் மரணத் தண்டனையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்ட நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்காளம் எதிர்த்து கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தீர்மானத்தின் மீது நடத்தப் பட்ட வாக்கெடுப்பில் 123 ஆதரவும் 36 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. 30 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவே இல்லை. எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்காவின் 20 மாகாணங்களில் தற்போத மரண தண்டனை தடை செய்யப் பட்டு அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது. இதற்கு முன்னதாக 2007 இல் ஐ.நா. சபை கூட்டத்தில் மரண தண்டனைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப் பட்டபோதும் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
உலகின் 90 % நாடுகளில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப் பட்டு விட்டன என்பதே குறிப்பிடத் தக்க விஷயம். உலகில் உள்ள மொத்த நாடுகளில் 3:2 பகுதி நாடுகள் மரண தண்டனையை தங்களது தண்டனை விதிமுறைகளில் இருந்து நீக்கிவிட்டன. பெரும்பான்மை என்பது மரண தண்டனைக்கு எதிரான கருத்தினைக் கொண்டிருக்கிறது.
இந்தியத் தலைவர்களின் கருத்து
‘கடவுள் தந்த உயிரைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும் உரிமை இல்லை’ என்று ஒரு முறை காந்தியடிகளும் குறிப்பிட்டு இருக்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவராக இருந்தபோது அவருக்கு மரண தண்டனை கைதிகளிடம் இருந்து கருணை மனுக்கள் அனுப்பப் பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து நாம் மரண தண்டனை குறித்து சிறிய அளவிற்கேனும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். மேலும் தான் குடியரசு தலைவராக இருந்தவரை எந்த கருணை மனுவினையும் அவர் நிராகரிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு முறை நமது அப்துல் கலாம் அவர்களும் தூக்குத் தண்டனையைக் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இவர்களைப் போலவே பலரும் மரண தண்டனையைத் தடை செய்ய வேண்டும், இந்தியத் தண்டனை சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் படவேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் பாலியல் – மரண தண்டனை
இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட யாகூப் மேனனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. அதற்குப் பிறகு யாருக்கும் மரணத் தண்டனை விதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது நிர்பயா வழக்குக் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது குறித்து பெரும்பாலானவர்களின் மனதளவில் இது சரியான தீர்ப்பு என்றே கருதி வருகின்றனர்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகத் தொகுப்பின்படி, இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு 354 மரண தண்டனைகள் தான் நிறைவேற்றப் பட்டன. ஆனால் கடந்த 2018 இல் நாடு முழுவதும் 162 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது 50% அதிகம். 2018 இல் நிறைவேற்றப் பட்ட மரணத் தண்டனைகளில் 35% பாலியல் குற்றங்களுக்கு வழங்கப் பட்டது என்பதும் முக்கியமாகக் கவனிக்கத் தக்கது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடு பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு 2013 ஆம் ஆண்டில் இருந்து தான் தொடங்கியது. நிர்பயா வழக்கினைப் போன்றே டெல்லியில் 2013 ஆம் ஆண்டு ஜோதி என்ற பெண் கூட்டுப் பாலியல் செய்யப் பட்டு கொல்லப் பட்டார். அதற்குப் பின்பு இந்தியத் தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டு, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் நடைமுறை ஆரம்பமானது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளில் மட்டுமே பாலியல் குற்றங்களுக்கு மரணத் தண்டனை வழங்கப் பட்டு வந்த நிலையில் இந்தியாவில் இந்த நடைமுறை என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைக் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியத் தண்டனைச் சட்டம் குறித்து
இந்தியத் தண்டனை சட்டம் என்பது தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது என்றும் இந்தியாவில் பெரும்பாலான குற்றங்களுக்கு மரணத் தண்டனை கொடுக்கப் படுவது இல்லை என்றும் பல தரப்புகள் கருத்து தெரிவிக்கின்றன. வெடிகுண்டு, பாதுகாப்பு விவகாரங்கள், பாலியல் போன்ற குற்றங்களுக்கு மட்டுமே மரணத் தண்டனை கொடுக்கப் படுகின்றன.
கர்ப்பிணி பெண்களுக்கும், மன நலம் பாதிக்கப் பட்டவர்கள், 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட கூடாது என்பதில் உலகின் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றன. இதனை மீறி தண்டனை வழங்கப் படும் பட்சத்தில் கருணை மனுக்களை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பும் குற்றவாளிகளுக்குக் கொடுக்கப் படுகிறது. ஆளுநரும், குடியரசு தலைவரும் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தி மரண தண்டனையை ரத்து செய்யவோ, நிராகரிக்கவோ, ஒத்தி வைக்கவோ முடியும். இதனால் மரண தண்டனை ரத்து செய்வதற்கான தேவை எதுவும் இல்லை என்ற குரல் ஒரு பக்கம் வலுத்து வருகிறது.
பாலியல் மரண தண்டனை ஏற்படுத்திய தாக்கம்
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் நாடுகளில் குற்ற எண்ணிக்கை எடுத்துக் கொண்டு மரண தண்டனை வழங்கப் படுவதால் மட்டுமே இதற்கான தீர்வினை எட்ட முடியாது என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2009 ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப் படுகின்றன. ஆனால் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அந்நாட்டில் 2 மடங்கு அதிகரித்து விட்டதை அந்நாட்டு குற்றப் பட்டியல் தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் 1979 முதல் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப் பட்டாலும 2006 ஆம் ஆண்டு திருத்தப் பட்ட சட்டம் இன்னும் வலிமையான தண்டனைகளையே வழங்கி வருகிறது. ஆனால் அந்நாட்டில் பாலியல் குற்றங்கள் 16 சதவீதம் அதிகரித்துள்ளதை எப்படி எடுத்துக் கொள்வது என்ற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது. அதேபோல வங்கதேசத்தில் மரண தண்டனையினால் பாலியல் வன்கொடுமைகள் குறைந்து உள்ளன என்று சொல்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
மேற்கண்ட முடிவுகள் மரண தண்டனை கொடுக்கப் படுவதால் மட்டுமே பாலியல் குற்றங்கள் குறைவதில்லை என்பதையே காட்டுகின்றன. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு பாமரன், ஒரு அபலை பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது மரண தண்டனைகள் தடை பாதுகாப்புக்கான ஒரு கவசமாகவும் இருக்கிறது. குற்றத் தண்டனைகளில் அதிக பட்சமான மரண தண்டனையை வழங்கும்போது குற்றவாளிகள் ஏதோ வகையில் பயந்து கொண்டு இத்தகைய குற்றங்களைச் செய்யாமல் இருப்பதற்கான குறைந்த பட்ச வாய்ப்பினை எதிர்ப் பார்த்துத்தான் இன்றைக்கும் மரண தண்டனை தீர்ப்புகள் இந்தியாவில் வரவேற்கப் படுகின்றன.
பாலியல் குற்றம் - அணுகுமுறை
அடிப்படையில் பாலியல் குற்றங்களை சட்ட விதிகளைக் கொண்டு அணுக வேண்டுமா? என்பது ஒரு அடிப்படையான உளவியல் கேள்வி. இந்தியச் சமூகங்களில் பெண்கள் எப்படி பார்க்கப் படுகின்றனர் என்பதைச் சரியாக விவாதிக்கும் பட்சத்தில் இதற்கான எளிமையான தீர்வினை அடைந்து விட முடியும்.
கங்கா, யமுனா, சரஸ்வதி, தாய் நாடு, பாரத மாதா என்பன போன்று நதிகளுக்கும் நாட்டுக்கும் பெண்களை மையப்படுத்தி பெயர்கள் வைக்கப் படுகின்றன. இந்தியாவின் கோவில் வழிபாடுகளில் பெரும்பாலானவை பெண் தெய்வங்களாகத் தான் இருக்கின்றன. இந்தப் புனிதமான பார்வை எல்லா நேரங்களிலும் இருக்கிறதா என்றால் அது சந்தேகத்தையே வரவழைக்கிறது. வலிமை உடையவனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் ஒரு ஆண், தன் எதிரே இருக்கும் ஒரு பெண்ணை வலிமை குறைந்தவளாகக் கருதும் மனப்போக்கில் ஆரம்பிக்கிறது முதல் பிரச்சினை.
ஆண்கள் மத்தியில் இருக்கிற பெண் தானே என்ற கண்ணோட்டம் பாலினத்தில் சமத்துவத்தை குறைத்து விடுகிறது. சமநிலை குலைந்த எந்த ஒரு பொருளும் தன் இயல்பான தன்மையுடன் இருப்பதில்லை. அது போலத்தான் பாலினச் சமத்துவம், உரிமை, மதிப்பு முழுமையாக உணரமுடியாத ஒரு சமூகத்தில் பாலியல் குற்றங்களும் அதிகரித்து ஆபத்தில் முடிகிறது. சமூக மதிப்பீடுகளில் பாலினச் சமத்துவத்தை வளர்ப்பதே இதற்கான ஒரே தீர்வாக இருக்க முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com