இறந்த நபர் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி… நடந்தது என்ன?
- IndiaGlitz, [Monday,November 29 2021]
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் இறந்தவர் ஒருவர் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆனால் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை பெறுவதற்கு உரிய நபர் வரமுடியாததால் அந்தப் பகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தலையொட்டி கைரா மாவட்டத்திலுள்ள தீபகர்ஹர் கிராமத்தின் 2ஆவது வார்டு பஞ்சாயத்து வேட்பாளராக சோஹன் முர்மு என்பவர் நின்றுள்ளார். அவர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி அப்பகுதியின் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இந்தத் தேர்லில் இறந்த நபரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு கிராம மக்கள் அனைவரும் முர்முவிற்கு வாக்கு அளித்து வெற்றிப்பெறச் செய்துள்ளனர்.
உயிரிழந்த சோஹன் முர்மு நடைபெறும் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்று விரும்பினாராம். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு கிராம மக்கள் முர்முவிற்கு வாக்களித்துள்ளனர். 28 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற முர்முவிற்கு தற்போது வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர் உயிருடன் இல்லை என்பதால் அந்தப் பகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரக்கப்பட்டு உயிரிழந்தவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பொதுமக்கள் செய்த இந்தக் காரியம் தற்போது அதிகாரிகளின் வேலையை அதிகப்படுத்தி இருக்கிறது என்று பலரும் இந்தச் சம்பவம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.