இறுதிச்சடங்கிற்காக உடலை குளிப்பாட்டியபோது உயிருடன் எழுந்தாரா 12 வயது சிறுமி? பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,August 27 2020]

இந்தோனேசியாவில் மருத்துவரால் இறந்து விட்டதாக கூறப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் இறுதிச் சடங்கின்போது உடலைக் குளிப்பாட்டும் போது திடீரென கண்களை திறந்ததாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள சிட்டி மல்ஃபுஃபா வர்தா என்ற 12 வயது சிறுமி ஹார்மோன் குறைபாடு மற்றும் நீரிழிவு நோயினால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 18-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்தனர். அப்போது சிறுமியின் உடலைக் குளிப்பாட்டும் போது திடீரென அந்த சிறுமி லேசாக கண் திறந்தார். மேலும் அவரது உடலில் வெப்பநிலை அதிகரித்து இதயத்துடிப்பும் லேசாக இருந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்து உயிரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் மீண்டும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து சிறுமிக்கு மீண்டும் இறுதி சடங்கு செய்து எரியூட்டப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் ’இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்த நோயாளிகளுக்கு வெகு அரிதாக தன்னிச்சையாக இதயத் துடிப்பு ஏற்படும் என்றும் அதனால் அவர்களுடைய உடலில் வெப்பம் இதயத்துடிப்பு சில நொடிகள் இருக்கும் என்றும் ஆனால் அவர்கள் மீண்டும் உயிர் பிழைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.