சேற்றில் விழுந்து இறந்த குட்டி யானை- 2 நாட்களாக அதே இடத்தில் நிற்கும் தாயின் பாசப் போராட்டம்
- IndiaGlitz, [Wednesday,February 19 2020]
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேயிலைத் தோட்ட பகுதியில் கடந்த 17 ஆம் தேதி காலை, யானைகள் கூட்டமாக நின்று கொண்டு பிளிறிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த பொது மக்கள் அச்சத்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கூட்டமாக நின்ற யானைகளை வனத்துறையினர் நெருங்கி பார்க்கும்போது ஒரு குட்டி யானை சேற்றில் தவறி விழுந்து இறந்ததைப் பார்க்க முடிந்தது. இறந்த குட்டி யானையை அங்கிருந்து அகற்றி புதைக்க வனத்துறை நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் தனது குட்டி யானையை நெருங்க விடாமல் அதன் தாய் கடந்த 2 நாட்களாக தனது குட்டியை விட்டு நகராமல் இருப்பது வனத்துறையினருக்கு பெரும் சங்கடத்தை வரவழைத்து இருக்கிறது.
நேற்றும் எப்படியாவது குட்டி யானையை மீட்டு விடலாம் என வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை. கடைசியில் தாய் யானையைத் தொந்தரவு செய்யாமல் விட்டு விடலாம், அது நகர்ந்ததும் குட்டியின் உடலை மீட்கலாம் என்ற முடிவிற்கு தற்போது வனத்துறை அதிகாரிகள் வந்துவிட்டனர். குட்டி யானை சேற்றில் விழுந்து இறந்ததும் மற்ற யானைகள் கொஞ்ச நேரம் இருந்து விட்டு சென்று விட்டன. ஆனால் அதன் தாய் தொடர்ந்து 48 மணி நேரமாக அதே இடத்தில் சிறிதும் அகலாமல் இருப்பது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்திருக்கிறது.