2 டிரக் முழுவதும் அழுகிய உடல்கள்: நியூயார்க்கின் மோசமான நிலை
- IndiaGlitz, [Thursday,April 30 2020]
உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மிக அதிகமாக உள்ளனர் என்றும் அந்நாட்டில் தான் கொரோனா வைரசால் மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கு 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நியூயார்க் நகரில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளது. காலை முதல் மாலை வரை இறந்தவரின் உடல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் அங்கு அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுபடுவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்
இந்த நிலையில் நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் உள்ள உடிக்கா அவென்யூவில் உள்ள ஆண்ட்ரூ டி.கிளெக்லி என்ற இறுதிச் சடங்கு இடத்தில் நின்றிருந்த 2 டிரக்கில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த காவலர்கள் அந்த டிரக்கை திறந்து பார்த்தபோது மனித உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த குளிரூட்டும் சாதனம் பழுதடைந்தது இறந்த உடல்கள் அழுகியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த உடல்களை உடனடியாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து காவலர் ஒருவர் கூறியபோது ’உடல் தகனம் செய்யும் இடத்தில் நின்றிருந்த இரண்டு டிரக்குகளில் இருந்து துர்நாற்றம் வீசியதாக காவல்துறைக்கு தகவல் வந்ததாகவும் இதனையடுத்து அந்த டிரக்குகளை திறந்துபார்த்தபோது, அதில் சுமார் 15 உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். இந்த சம்பவம் நியூயார்க் நகரில் கொரோனா வைரசால் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பு நிலையை எடுத்துக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.