ரிஹானா நாட்டிற்கு இந்தியா தடுப்பூசி நன்கொடை… விவாதத்திற்கு மத்தியில் வைரலாகும் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

பிரபல பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானா தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் அவர் மேற்கு இந்திய தீவு நாடுகளுள் ஒன்றான பார்படாஸ் என்ற நாட்டைச் சார்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. தற்போது பார்படாஸ் நாட்டின் பிரதமர் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் இந்தியா 1 லட்சம் கோவிஷில்டு கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறது.

இதனால் பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி இந்தியப் பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் பர்படாஸ் நாட்டு மக்களின் சார்பாகவும் தன்னுடைய சார்பாகவும் நன்றி தெரிவித்து உள்ளார். முன்னதாக பாடகி ரிஹானா “இந்தியாவில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தைக் குறித்து நாம் ஏன் பேசவில்லை?“ எனத் தன்னுடைய டிவிட்டரில் கருத்துப் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவிற்கு இந்தியப் பிரபலங்கள் பலர் பதிலடி கொடுத்தன் விளைவாக தற்போது உலகம் முழுவதும் விவசாயப் போராட்டம் கவனம் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் பாடகி ரிஹானாவின் சொந்த நாடான பார்படாஸுக்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இத்தகவல் ரிஹானா குறித்த விவாதத்திற்கு மத்தியில் கடும் வைரலாகி வருகிறது. மேலும் இதைத்தவிர ரிஹானா குறித்து சில விமர்சனக் கருத்துகளும் இணையத்தில் உலா வருகின்றன. அதில் காலிஸ்தான் தொடர்புடைய ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் 2.5 மில்லியன் டாலர் கொடுத்து விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இத்தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாகச் செயல்படுபவர் ரிஹானா. அதனால்தான் அந்நாட்டு கொடியை கையில் பிடித்து இருக்கிறார் என்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணையத்தில் உலா வந்தது. ஆனால் அப்புகைப்படம் போலி என்பதை தற்போது ஊடகங்கள் நிரூபித்து இருக்கின்றன.