கீ.வீரமணியை மீண்டும் கிண்டல் செய்த அழகிரி மகன்

  • IndiaGlitz, [Saturday,August 25 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, 'வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள், வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம் என்று பதிலளித்தார்.

கீ.வீரமணியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டரில், 'காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். என்று கூறியிருந்தார். தயாநிதியின் இந்த கருத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் சிறிய அளவில் கண்டங்களும் எழுந்தன.

இந்த நிலையில் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொள்ளவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பதில் தவறில்லை' என்று கூறினார். இதற்கு தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து எதுவும் சொல்லாமல், வாயை மூடும் எமோஜியை மட்டும் பதிவு செய்து தனது கிண்டலை வெளிப்படுத்தியுள்ளார். தயாநிதியின் இந்த கிண்டலும் தற்போது நெட்டிசன்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.