தமிழ்நாட்டின் தாவூத் இப்ராஹிம் கம்போடியாவில் தற்கொலை

  • IndiaGlitz, [Thursday,October 05 2017]

தமிழகத்தின் தாவூத் இப்ராஹிம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரெளடி கம்போடியா நாட்டில் சயனைடு விஷம் அருந்தி திடிரென தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 44வயது ஸ்ரீதர் தனபால் என்பவர் சாராய வியாபாரத்தில் கொடிகட்டி பறந்ததோடு, கட்டப்பஞ்சாயத்து முதல் கொலை வரை பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர். இவர் மீது தமிழகம் முழுவதும் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 7 கொலை வழக்குகள். வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்ற ஸ்ரீதர், கடந்த 2013ஆம் ஆண்டு திடீரென இந்தியாவில் இருந்து வெளீயேறி துபாய்க்கு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பல நாடுகளுக்கு மாறி மாறி பறந்த ஸ்ரீதரை பிடிக்க இண்டர்போல் உதவியை போலிசார் நாடிய நிலையில் தற்போது அவர் கம்போடியாவில் சயனைடு விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஸ்ரீதருக்கு குமாரி என்ற மனைவியும், தனலட்சுமி, சாருமதி என இரு மகள்களும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் சந்தோஷ் லண்டனில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்தியா வரத்தயார் என்றும், ஆனால் போலீசார் தன்னை என்கவுண்டர் செய்யாமல் சட்டப்படி வழக்குகளை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

1972ஆம் ஆண்டு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதர், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பின்னர் நெசவுத்தொழிலில் சில ஆண்டுகாலம் ஈடுபட்ட அவர், 1992ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு பின்னர் சாராய அதிபரானார். இவருடைய வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.