டி20-யில் வெளுத்து கட்டிய டேவிட் வார்னர்… கண்ணீரில் தத்தளிக்கும் SRH!
- IndiaGlitz, [Monday,November 15 2021] Sports News
ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டியின் முதல்பாதியில் சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிப்பெற்றது. இதற்குக் காரணம் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணியை சரிவர வழிநடத்தவில்லை. மேலும் அவர் ஃபார்மிலே இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
காரணம் ஐபிஎல்-இல் விளையாடிய டேவிட் வார்னர் 8 போட்டியில் 185 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். இதனால் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற இரண்டாம்கட்டப் போட்டிக்கு நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு SRH-இன் பிளேயிங் 11 இல் இருந்தும் தூக்கப்பட்டதால், டேவிட் வார்னர் அணி வீரர்களோடு களத்திற்கு வராமல் பார்வையாளர்கள் பகுதியில் இருந்தே மற்ற வீரர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
இப்படி SRH நிர்வாகத்திற்கும் டேவிட் வார்னருக்குமான மோதல் அதிகரித்த சமயத்தில் தற்போதைய ஐபிஎல் ஏலத்திற்காக அவரை SRH நிர்வாகம் தக்க வைக்கவும் மறந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகப்பெரிய நன்றியை டேவிட் வார்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் ஐபிஎல் போட்டிகளில் இனி டேவிட் வார்னரை பார்க்கவே முடியாது என்றும் ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை போட்டிக்காக விளையாடிய டேவிட் வார்னர் நேற்றைய போட்டியில் பவுண்டரி, சிக்ஸர் என்று அடித்து நொறுக்கி இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர்ந்து டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றுள்ளது. வெறும் 34 பந்துகளுக்கு அரை சதத்தை அடித்த டேவிட் ஒருவழியாக தற்போது பழைய ஃபார்மிற்கு வந்துள்ளார்.
மேலும் டி20 உலகக்கோப்பையின் 7 போட்டிகளில் 3 அரைசதம் மற்றும் 289 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். இதனால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றுள்ளார். இப்படி டி20 உலகக்கோப்பையில் அடுக்கடுக்கான சாதனைகளை செய்திருக்கும் டேவிட் வார்னரை SRH கேப்டன் பதவியில் இருந்தும் தூக்கியிருக்கிறது. அதோடு ஐபிஎல் ஏலத்திற்காக தக்கவைத்துக் கொள்ளவும் இல்லை. இதனால் SRH நிர்வாகத்தை கிண்டல் செய்து ரசிகர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.