திருமணமான ஒரே மாதத்தில் மகளை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்: காதல் காரணமா?

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

திருமணமான ஒரே மாதத்தில் பெற்ற மகளை அவரது தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் உத்தரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரமேரூர் அருகே செந்தாரகை என்ற இளம் பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து செந்தாரகை தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த மரணம் குறித்து சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு புகார் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து விசாரித்தபோது செந்தாரகையை அவரது தந்தையே கொலை செய்தது தெரியவந்தது. திருமணத்திற்கு முன்பே செந்தாரகை ஒருவரை காதலித்ததாவும், ஆனால் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தாரகையின் தந்தை பாலாஜி மிரட்டி வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த திருமணம் பிடிக்காததால் கணவர் வீட்டில் வாழ பிடிக்காமல், தாய் வீட்டுக்கு செந்தாரகை திரும்பியதாகவும் இதனை அடுத்து அவருக்கு புத்திமதி சொல்லி கணவர் வீட்டுக்கு அனுப்ப பாலாஜி முயற்சித்ததாகவும் ஆனால் அவர் பிடிவாதமாக இருந்ததால் ஆத்திரத்தில் அடித்ததாக தெரிகிறது. இதனால் எதிர்பாராத வகையில் கீழே விழுந்த செந்தாரகை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் மணப்பெண் அவரது தந்தையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.