புரண்டு கதறி அழுத பெற்றோர்....! இரக்கமில்லாமல் பரிதவிக்க விட்டு சென்ற மகள்....!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா பகுதியில் உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் பச்சியப்பன், சிந்தாமணி தம்பதி. 12-ஆம் வகுப்பு முடித்துள்ள இவர்களது மகள் பவதாரணியும், அதே பகுதியில் உள்ள மணி என்ற 25 வயதுடைய இளைஞரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், 18 வயது நிரம்பிய தாரணி வீட்டை விட்டு வெளியே வந்து மணியை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்பின்பு இந்த காதல் ஜோடி கடந்த செவ்வாயன்று நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.

கடந்த வியாழன்று இருவரையும் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் காவல் துறையினர். நீதிபதி விஜயன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட போது, தாரணி தன் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். சட்டப்படி திருமண வயதை இருவரும் அடைந்துவிட்டதால், திருமணம் செய்வது அவரவர் விருப்பம் என்று கூறி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் காதல் ஜோடியை வாகனத்தில் போலீசார் அழைத்து செல்லமுயன்ற போது, தாரணியின் தந்தை பச்சியப்பனும், தாய் சிந்தாமணியும் அழுது புரண்டு போராடியுள்ளனர். ஒரு வேளை அழுது அழைத்தால் கூட பெண் வந்துவிடமாட்டாளா என்ற ஏக்கத்தில் தாய், வாடா சின்னப்பையா என்று கூறி அழுதுள்ளார். போலீஸ் வாகனத்தின் முன்பு அழுது புரண்ட சிந்தாமணியை பெண் காவலர்கள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். ஆனால் பச்சியப்பன் காரின் பம்பரை பிடித்து, கதறி அழுது மகளை அழைத்துள்ளார். இதை கண்டுகொள்ளாமல் மகள் காரினுள், கணவருடன் அமர்ந்துள்ளார். இதனால் போலீசார் மற்றொரு வாகனத்தில் காதல் ஜோடியை அழைத்து சென்றுள்ளனர். இதன்பின்பு பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். திடீரென்று இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், கோர்ட் வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்திய பெற்றோர், கதறி அழுததை பார்த்துக்கூட கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார் கல்நெஞ்சம் கொண்ட இளம்பெண். இந்த நிகழ்வு அருகில் இருந்தவர்கள் மற்றும் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.