குடும்பச் சொத்தில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமபங்கு– உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!!
- IndiaGlitz, [Tuesday,August 11 2020]
இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் பெற்றோரின் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு உண்டு எனச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் பலர் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு. அதைப்போல பாகம் பிரிக்கப்படாத குடும்பச் சொத்திலும் பெண்களுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பில் “பெற்றோருக்கு ஒருமுறை மகள் என்றால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மகள்தான். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பூர்வீகச் சொத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கு உரிமை உண்டு” என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்து உள்ளது. காரணம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வாரிசுரிமை சட்டத்திருத்தத்தின் படி 25.3.1989 க்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியாது என்று இருக்கிறது. இந்தச் சட்டத் திருத்ததையும் மாற்றும் விதமாக பூர்வீகச் சொத்தில் எப்போதும் பெண்களுக்கு சமபங்கு உண்டு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவது குறித்து நடைமுறையில் இருந்த “இந்து பெண்கள் சொத்து சட்டம்” யின்படி பிறந்த வீட்டில் பெண்களுக்கு தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்தது. சொத்தில் உரிமை கொண்டாட உரிமை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின் 1956 இல் நிறைவேற்றப் பட்ட இந்து வாரிசுச் சட்டப்படி பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தம் முறைப்படி அமல்படுத்தப் படாததால் 2005 இல் மீண்டும் பெண்களுக்குச் சொத்துரிமையை வலியுறுத்து விதமாக வாரிசுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பெண்பிள்ளைகளுக்கு ஆண்களைப் போல சொத்தில் சமபங்கு உண்டு என்பதோடு மட்டுமல்லாது பிரிக்கப்படாத குடும்பச் சொத்திலும் சமவுரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை இந்தியாவில் உள்ள பல தலைவர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.