பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் பதவி பறிப்பு: ஐபிஎல்-க்கும் சிக்கல் வருமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் என்பவர் பந்தை சேதப்படுத்திய காட்சி கேமிராவில் பதிவாகி அது திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து கூறிய பான்கிராப்ட், '`தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்த வேண்டுமென முன்னரே நாங்கள் முடிவெடுத்தோம். நான் இந்தச் செயலை செய்யும் போது அங்குப் பல கேமிராக்கள் இருந்ததை மறந்து விட்டேன் அதை உணர்ந்த போது பதட்டமாகிவிட்டேன் எனது செயலை நினைத்து வருந்துகிறேன்' என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னர் ஆகியோர்களின் பதவியை மட்டும் பறித்தது. பொறுப்பு கேப்டன் டிம் பெய்ன் தலைமையின் கீழ் இருவரும் தொடர்ந்து அணியில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியினர் பந்தை சேதப்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான போட்டி ஒன்றிலும் இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் பதவியை இழந்துள்ள ஸ்மித், ஐபிஎல் போட்டியில் ராயல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் உள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் போட்டியிலும் அவரது பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியபோது, 'பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்தே, பிசிசிஐ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடவடிக்கையை எடுக்கும். இப்போதுள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் அவர் மீது பிசிசிஐ அல்லது ராஜஸ்தான் அணி ஏதும் எடுக்க முடியாது' என்று கூறினார்.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் இந்த ஆண்டு மீண்டும் ராஜஸ்தான் அணி ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் திடீரென புதிய சிக்கல் எழுந்துள்ளது அந்த அணியினர்களுக்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout