Download App

Darbar Review

'தர்பார்' திரைவிமர்சனம்
ரஜினியின் வெறித்தனமான ஒன்மேன் தர்பார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி முதல்முதலில் இணையும் படம் என்றவுடன் இந்த படம் பிரம்மாண்டமாக இருப்பது மட்டுமின்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. படத்தின் டிரைலரில் இருந்த அதிரடி ஆக்சன் காட்சிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’தர்பார்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.

மும்பை நகரத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு போதை கும்பல் தலைவன், போலீசார்கள் 17 பேர்களை உயிரோடு எரித்து கொல்கிறான். அதனால் மும்பை போலீஸ் மீது பொதுமக்களுக்கு ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டது. இந்த அவநம்பிக்கை காரணமாக போலீஸ் வேலையில் இருந்து பலர் விலகிவிடுகின்றனர். இதனால் போலீஸ் படையே குறைகிறது. போலீஸ் படை குறைந்ததால் அங்கு போதை மருந்து மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவதும் அவர்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதும் அதிகரிக்கின்றது. போதுமான போலீஸ் படை இல்லாததால் போதை கும்பலை எதிர்க்க முடியாத நிலையில் மும்பை போலீஸ் கமிஷனராக ஆதித்யா அருணாசலத்தை நியமனம் செய்து டெல்லி நிர்வாகம் அவரை மும்பைக்கு அனுப்பி வைக்கின்றது. ஒருசில நிபந்தனைகளுடன் பதவியேற்கும் ஆதித்யா அருணாச்சலம் பதவியேற்ற  ஒரே நாளில் முக்கிய புள்ளி ஒருவரை கைது செய்து போதை கும்பலை திணறடிக்கின்றார். இதனால் தொழில் மற்றும் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்ட போதைக்கும்பல் தலைவன் எடுக்கும் பழிவாங்கும் நடவடிக்கை, அதன்பின் இருபக்கமும் ஏற்படும் இழப்புகள் என சிலபல டுவிஸ்டுகளுடன் வில்லன் கும்பலை போலீஸ் எப்படி ஒழிக்கின்றது என்பதுதான் இந்த படத்தின் கதை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்குப்பின் ஒரு அட்டகாசமாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். வெறித்தனமாக குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வது, போலீஸ் விதிகளை மீறி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளியை பிடிக்க குற்றவாளி போலவே யோசிப்பது, மனித உரிமை கமிஷன் தலைவியையே மிரட்டுவது மற்றும் இவ்வளவையும் அவர் ஏன் செய்கிறார் என்பதற்கான ஒரு டுவிஸ்டும் ரஜினியின் கேரக்டரில் இருப்பதால் அவரது நடிப்பை ரசிக்க வைக்கின்றது. மூன்று முகம் படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கச்சிதமாக பொருந்திய போலீஸ் கேரக்டர். திமிர், வில்லத்தனம் மற்றும் காமெடியுடன் கலந்த வசனங்கள், தோற்றத்தில் இளமை, கண்களில் அதே பவர், ஆக்சன் காட்சிகளில் பாட்ஷாவை நினைவுப்படுத்துவது என ஒரு ரஜினி படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டாய் இந்த படம் அமைந்துள்ளது. இதற்கு முன் ரஜினியை வைத்து இயக்கிய ஒருசில இயக்குனர்கள் ரஜினியை வைத்து தங்கள் சொந்த கருத்தை திணிக்க முயற்சித்த நிலையில் ஒரு ரஜினியை ரசிகனை முழுமையாக எப்படி திருப்திப்படுத்த வேண்டும் என்று பார்த்து பார்த்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒவ்வொரு காட்சியையும் வைத்துள்ளார். நயன்தாரா உடன் ரொமான்ஸ் மற்றும் காமெடியில் இருபது வருடங்களுக்கு முந்தைய ரஜினியை அப்படியே பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் மகளிடம் காட்டும் அன்பு, பாசம், இரண்டாம் பாதியில் மகளுக்காக அவர் எடுக்கும் அவதாரம் ஆகியவையும் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் நாயகியா? அல்லது சிறப்புதோற்றமா? என்று எண்ணும் அளவுக்கு அவருடைய கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் மெயின் கதைக்கும் அவருக்கும் ஒரு சதவிகிதம் கூட தொடர்பில்லை என்பதால் அவருடைய கேரக்டர் அந்நியோன்யமாக தோன்றுகிறது. இருப்பினும் ஒரு பாடலுக்கு ரஜினியுடன் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடல் நயன் ரசிகர்களுக்கு திருப்தி தரும்.

நிவேதா தாமஸ்க்கு ரஜினியின் மகள் கேரக்டர் என்றாலும் பல காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை மிக அருமையாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் காட்சி, மருத்துவமனை காட்சியில் நிவேதா ஆச்சரியப்படுத்துகிறார். படத்தின் முதல் பாதியின் கலகலப்பிற்கு யோகிபாபு ஒரு முக்கிய காரணம். ரஜினியைஉஏ கலாய்க்கும் பல காட்சிகளுக்கு திரையரங்கில் நல்ல ரெஸ்பான்ஸ். ‘பெரியவங்கள கூட்டிட்டு வரப்போறிங்களா? உங்களை விட பெரியவர் போதிதர்மர் ஒருவர்தான்’ என்று ரஜினியை கலாய்த்து யோகிபாபு பேசும் டயலாக்கின் போது தியேட்டரே அதிர்கிறது.

முதல்பாதியில் ஒரு வில்லன், இரண்டாம் பாதியில் ஒரு வில்லன். முதல் பாதியின் இறுதியில் அறிமுகமாகும் சுனில் ஷெட்டி, முதல் பாதி வில்லன் செய்த புத்திசாலித்தனமான விஷயங்களில் ஒரு சதவிகிதம் கூட செய்யவில்லை. இந்த படத்தில் குறை சொல்லும் வகையில் உள்ள ஒரே அம்சம் சுனில்ஷெட்டி கேரக்டர். ரொம்ப சுமாராக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் ரஜினிக்கு சரியான வகையில் ஈடுகொடுப்பார் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்.

அனிருத்தின் இசையில் சும்மா கிழி, டம் டம், தனி வழி ஆகிய பாடல்கள் அருமை. படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். ஒரு அதிரடி ஆக்சன் படத்திற்கு ஏற்ற அட்டகாசமான பின்னணி இசை. குறிப்பாக ரஜினியின் அதிரடி ஆக்சன் காட்சிகளின்போது பின்னணியில் ஒலிக்கும் ‘தலைவா’ சூப்பர். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் கச்சிதம்.

ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையில் முதல் பாதியில் வரும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அனைத்துமே ஆக்சன் ரசிகர்களுக்கான விருந்து. ரஜினி படத்தில் இப்போதைக்கு இவ்வளவு சூப்பரான ஒரு ஆக்ஷன் காட்சியை பார்த்தது இல்லை. குறிப்பாக மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் ஸ்டண்ட் காட்சி அபாரம். ’வயது என்பது எனக்கு ஒரு நம்பர் தான்’, ’முடியாததை முடித்துக் காட்டுவதுதான் என்னுடைய ஸ்பெஷல்’ உள்பட ஒருசில பஞ்ச் டயலாக்குகள்  ரஜினிக்காகவே ஏஆர் முருகதாஸ் எழுதியது ரசிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் ’பணம் இருந்தால் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஷாப்பிங் கூட போகலாம்’ என அரசியல் நையாண்டி வசனங்களும் உண்டு. முதல் பாதி முழுவதும் வில்லன் எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவுகள், அதைவிட புத்திசாலித்தனமான ரஜினி அவற்றை முறியடிக்கும் காட்சிகள், சிக்கலில் இருக்கும் வில்லனுக்கு எப்படி தப்பிக்க வேண்டும் என்று ரஜினியே ஐடியா கூறுவது, அந்த ஐடியாவை தவிர வேறு வழியே இல்லை என்று வில்லன் முடிவு செய்து அதை செயல்படுத்தும்போது இன்னும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வது என ஏ.ஆர்.முருகதாஸின் முதல் பாதி திரைக்கதை கைதட்டல் பெறுகிறது. சரியான இடத்தில் பாடல், ஆக்சன் காட்சிகளை வைத்து படத்தை கடைசி வரை போரடிக்காமல் கொண்டு சென்றுள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் முதல் பாதியில் வரும் வில்லன் இறந்து, இரண்டாம் பாதியில் சுனில்ஷெட்டி வந்தவுடன் திரைக்கதை கொஞ்சம் டல் அடிக்கின்றது. இருப்பினும் ரஜினி படத்தை ஒன்மேனாக இருந்து காப்பாற்றுகிறார்.

மொத்தத்தில் முதல்பாதியில் ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸும், இரண்டாம் பாதியும் ரஜினி மற்றும் நிவேதா தாமஸ் கலக்கியிருக்கும் இந்த தர்பார், ரஜினி ரசிகர்களுக்கான ஒரு தாறுமாறான படம் என்பதில் சந்தேகம் இல்லை.

Rating : 2.8 / 5.0