சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடம்: டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்திய கடைசி பட குழுவினர்..
Send us your feedback to audioarticles@vaarta.com
எங்கள் 'பிபி 180' திரைப்படத்தின் வில்லனாக நடித்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி என அவர் நடித்த கடைசி திரைப்படத்தின் தயாரிப்பாளர் அதுல் போசாமியா அஞ்சலி செலுத்தி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்புள்ள டேனியல்,
அதுல் இந்தியா மூவிஸ் ஆழ்ந்த வருத்தத்துடன் கனத்த இதயத்துடன் தனித்துவமான நடிகர் மற்றும் ஒரு நல்ல மனிதருக்கு பிரியாவிடை கொடுக்க இந்த அஞ்சலி குறிப்பை எழுதுகிறோம். உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது.
உங்களது கடைசி திரைப்படமான ’பிபி 180’ இன் தயாரிப்பாளர் என்ற முறையில் கதாபாத்திரங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும், நம்பகத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதற்காக எந்த அளவுக்கு நீங்கள் இணையற்ற அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள் என்பதை நேரடியாக காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திரையில் உங்கள் நடிப்பு எப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். உங்கள் சொந்த சேமிப்பில் நீங்கள் ஆவடியில் கோயில் கட்டி இருக்கிறீர்கள் என்ற விஷயம் அறிந்து நாங்கள் வியந்தோம். உங்களுடன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த கோயில் இல்லாமல் இன்னும் இரண்டு கோயில்கள் கட்ட வேண்டும் என்று விரும்பினீர்கள். ஒன்று சிவனுக்கு, இன்னொன்று லட்சுமிக்கு. கடந்த மாதம் நீங்கள் குஜராத்துக்கு சென்றிருந்தீர்கள். அப்போது உடன் வந்த நாங்களும் சோம்நாத் ஜோதிர்லிங் மற்றும் ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆகிய இடங்களை தரிசித்தோம். அங்கு நீங்கள் ருத்ர அபிஷேகம் செய்தீர்கள்.
உங்கள் எல்லைக் கடந்த திறமைக்கு அப்பால், நீங்கள் ஒரு கனிவான மற்றும் கருணையான நபர். எப்போதும் உதவிக் கரம் நீட்டவும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தீர்கள். படப்பிடிப்புத் தளத்தில் எங்களுடைய சோர்ந்து போன நாட்களைக் கூட ஒளிரச் செய்தது உங்கள் இருப்பு. மேலும், உங்கள் சிரிப்பு உங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நீங்கள் இனி உடலால் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள். நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இனிவரும் தலைமுறைக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பீர்கள்.
அன்புள்ள டேனியல், நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் மீதான அன்பும் உங்கள் நினைவும் எங்கள் இதயங்களில் ஒருபோதும் குறையாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments