இறந்த பின்னரும் செய்த உதவி.. பிரபல நடிகரின் நெருங்கிய உறவினர்.. டேனியல் பாலாஜி குறித்த சில தகவல்கள்..!

  • IndiaGlitz, [Saturday,March 30 2024]

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் குறித்த சில தெரியாத தகவல்களை பார்ப்போம்.

டேனியல் பாலாஜி அம்மாவும், மறைந்த நடிகர் முரளியும் அம்மாவும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பதால் டேனியல் பாலாஜியும் முரளியும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலாக திரையுலகில் முரளி நடித்த ’காமராசு’ என்ற படத்தில் உதவி இயக்குனராக டேனியல் பாலாஜி பணிபுரிந்தார். அதன்பின் கமல்ஹாசனின் ’மருதநாயகம்’ படத்தில் புரடொக்சன் மேனேஜர் பிரிவிலும் பணிபுரிந்தார்.

அதன் பிறகு அவர் ’சித்தி’ சீரியலில் அறிமுகமான நிலையில் சுந்தர் கே விஜயன் இயக்கத்தில் உருவான ’அலைகள்’ என்ற படத்தில் நடிகரானார். இந்த படத்தில் தான் அவருக்கு டேனியல் பாலாஜி என்ற பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் ’ஏப்ரல் மாதத்தில்’ ’காதல் கொண்டேன்’ போன்ற படங்களில் நடித்த டேனியல் பாலாஜி சூர்யாவுடன் ’காக்க காக்க’ படத்திலும் கமலஹாசன் உடன் ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடித்திருந்தார்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரது நெருங்கிய நண்பரான டேனியல் பாலாஜி அவர்களுடன் ’பொல்லாதவன்’ ’வடசென்னை’ போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் உடன் ’பைரவா’ மற்றும் ’பிகில்’ படத்தில் நடித்த டேனியல் பாலாஜி அஜித்துடன் ’என்னை அறிந்தால்’ படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் மறைந்த டேனியல் பாலாவின் உடல் கொட்டிவாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கௌதம் மேனன், அமீர், வெற்றிமாறன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேற்று இரவு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் டேனியல் பாலாஜி கண்கள் ஏற்கனவே தானம் செய்யப்பட்டதை அடுத்து அவரது கண்கள் எடுக்கப்பட்டு தற்போது அவரது உடல் அவரது புரசைவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.