செல்போனால் வரும் பேராபத்து
- IndiaGlitz, [Tuesday,January 07 2020]
செல்போன்கள் மன அளவிலும் உடல் அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் செல்போன் வருவதாக நினைப்பது கூட பேராபத்தை விளைக்கும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலர் செல்போன் ஒலிக்காத போதும் செல்போன் ஒலிப்பதாக நினைத்து பதட்டத்துடன் எடுத்து அதன் ஸ்கீரினைப் பார்ப்பதனை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். உண்மையிலேயே இப்படியான உணர்வுகள் ஏன் தோன்றுகின்றன? இதுவும் ஒருவகையான மனநோயா என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இப்படியான அனுபவங்கள் பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படுவதுண்டு.
செல்போன்கள் ஒலிக்காத போதும் அதிர்வுகள் ஏற்படுத்துவதைப் போலவே உணரப்படுவதை பாண்டம் அதிர்வு (phantom vibration) என்று அழைக்கப்படுகிறது. ரிங்சைட்டி எனவும் இதனைக் கூறுகின்றனர். இந்த பாண்டம் அதிர்வுகள் எனப்படுவது மூளையில் செல்போன்கள் ஒலிப்பதைப்போலவே உணர்வுகள் உண்டாக்கப்பட்டு செல்போனை எடுத்துப் பார்க்கும் இயக்கத்திற்கு மனிதர்களைத் தூண்டுகிறது. இத்தகைய மனப்பாதிப்புகள் வயதானவர்களைவிட இளம் வயதினரிடம்தான் அதிகளவில் காணப்படுகிறது. நொடிப்பொழுதில் தோன்றும் இந்த உணர்வு மனப்பாதிப்புகளையும் அதிர்வுகளையும் தோற்றுவிக்கின்றன. சிலர் ஒரு நாளைக்குப் பல முறைகள் கூட இந்த பாண்டம் உணர்வினை அனுபவிக்கின்றனர். பாண்டம் அதிர்வுகள் உண்டாக்கும் மன ஏமாற்றங்கள் திட்டமிடாமலே தனிப்பட்ட முறையில் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்குகிறது.
சில சமயங்களில் செல்போன்கள் அருகில் இல்லாதபோதும் இந்த பாண்டம் உணர்வு தோன்றுகிறது. அந்த நொடியில் ஏற்படும் மன அழுத்தம் உடனடியாக செல்போனை பார்க்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. இத்தகைய செயல்கள் செல்போனிற்கு அடிமை என்ற ரீதியில் புரிந்து கொண்டுவிட்டு நகர்ந்து போகின்ற சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஏனென்றால் 10 வயதைத் தாண்டிய அனைவரது கைகளிலும் இன்றைக்கு செல்போன்கள் இருக்கின்றன என்பதால் இதெல்லாம் வாடிக்கை, சாதாரண நிகழ்வுதான் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. ஆனால் மருத்துவர்கள் சாதாரணமாக உணரப்படும் இத்தகைய மன அதிர்வுகள் நாட்பட்ட நோய்களுக்கு அடிப்படைக் காரணியாக மாறுகின்றன என்பதனையும் தற்போது உறுதி செய்துள்ளனர்.
பல முனைகளிலும் இளைய தலைமுறையினருக்கு மன அழுத்தம் ஏற்படுகின்ற நிலைமையில் செல்போன்கள் ஒலிப்பதாகவும் அதனை உடனே எடுத்துப்பார்த்தே தீர வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும் இந்த பாண்டம் உணர்வு (மாயையான) அல்லது மூளையின் செயல்பாடு தீராத நோய்களுக்கும் மன உளைச்சலுக்கும் காரணிகளாக மாறிவருகிறது. குழந்தைகளின் கைகளிலும் தற்போதைக்குச் செல்போன்கள் புழங்கப்பட்டு வருகின்றன. சிறு அதிர்வு, சிறு ஏமாற்றம் என்றாலும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்போது தீராத வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. ஒருபோதும் செல்போன்களை அத்யாவசியமான கருவியாகக் கருதக்கூடாது என்பதே இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ளள ஒரே வழி.