எமனாக மாறும் Chair சிட்டிங்? தப்பித்துக் கொள்ள எளிய டிப்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன், அடிவயிற்றில் கொழுப்பு, நீரிழிவு, இதயநோய் முதற்கொண்டு புற்றுநோய் வரை பல உடல்பாதைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கு முன்பு ஐடி துறை ஊழியர்கள் மட்டுமே இதுபோன்ற நெருக்கடியான நிலைமையில் வேலை செய்து வந்தனர்.
ஆனால் தற்போது கொரோனா ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் காரணமாக உலகில் பெரும்பாலான ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கு மாறிவிட்டனர். இதனால் உடலுக்கு எந்த உழைப்பும் இல்லாமல் தொடர்ந்து பல மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப்பார்க்கும் முறைக்கு நாம் பழகிவிட்டோம். இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து தற்போது மருத்துவர்கள் கடும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றிய ஆய்வு ஒன்றில், ஒரு நாளைக்கு 8 மணிநேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலைப் பார்ப்பதற்கும் ஒரு நபர் புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போவதற்கு சமம் என குறிப்பிட்டு இருக்கிறது.
இதனால் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அல்லது இப்படியான வேலைகளுக்கு இடையில் சில அடிப்படையான Stretching Exercises செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவா ஒரே இடத்தில் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்யும்போது நேரம் போவதே தெரியாது. ஆனால் உடல் எந்த இயக்கமும் இல்லாமல் இருப்பதால் நம்முடைய உடலில் இருக்கும் ஆற்றல் வீணாகாமல் அப்படியே உடலில் தங்கிவிடுகிறது. இதனால் உடல்பருமன் ஆவது, அடிவயிற்றில் கொழுப்பு தங்கி விடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அடுத்து, நாம் நடக்கும்போது இருக்கும் குடல் இயக்கத்தைவிட உட்காரும்போதும் படுக்கும்போதும் நம்முடைய குடல் இயக்கத்தின் திறன் குறைந்துபோகிறது. இதனால் நாளடைவில் செரிமானக் கோளாறு ஏற்பட்டு குடல் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதோடு ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து இருக்கும்போது தசை இயக்கத்தில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால் உடலில் உள்ள சர்க்கரையானது கரையாமல் அதுவே நாளடைவில் நீரிழிவு நோயாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் உடலில் அதிகபடியான இயக்கம் இல்லாததால் தசைகள் மற்றும் கிளட்டியஸ் பலவீனம் அடைந்து, அதுவே நாளடைவில் பெரிய தலைவலியாக மாறுகிறது. இதனால் மூட்டுவலி, தசைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு இடுப்பு எலும்பு வலி, தோள்பட்டை, பின்முதுகு வலி என ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்துவிடுகின்றன.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும்போது சுவாசத்தில் மந்தம் ஏற்படுகிறது. இதனால் உடலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து நாளடைவில் இதயநோயும் தொற்றிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1950 வாக்கில் லண்டனில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பேருந்து நடத்துனரைவிட ஓட்டுநருக்கு அதிகளவில் இதயநோய் வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதாவது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் நடத்துனர் தன்னுடைய ஆற்றலை நடப்பதன் மூலம் எரித்துவிடுகிறார். ஆனால் எப்போதும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் ஓட்டுநர், உடலில் எந்த இயக்கமும் இல்லாமல் தேவையில்லாத கொழுப்புகளை உடலில் சேர்த்து வைத்துக் கொள்கிறார்.
இந்தக் கொழுப்பின் அளவானது நாளடைவில் உடல்பருமான மாறுகிறது. இத்தகைய உடல் பருமன் காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் உடல் உறுப்பு மற்றும் மூளைக்குச் செல்லும் காற்றின் அளவு குறைந்து மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் அவரை தொற்றிக் கொள்கின்றன.
மேலும் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு நுரையீரல், சிறுநீரகம், பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
இதுபோன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் குறைந்தது அரை மணிநேரத்திற்கு ஒருமுறையாவது எழுந்து நடப்பது அல்லது சிறிய சிறிய Stretching Exercises பயிற்சிகளை செய்வது போன்ற பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படி செய்வதால் நம்முடைய உடல் பலமணிநேரம் அசையாமல் இருப்பது தவிர்க்கப்படும். இதைத்தவிர காலை நேரங்களில் குறைந்தது 45 மணிநேர நடைப்பயிற்சியை பழக்கமாக்கிக் கொள்ளலாம். இதனால் ஒரு நாளில் நாம் தேற்றி வைத்துக்கொள்ளும் ஆற்றலை கரைப்பதற்கு இது உதவியாக இருக்கும்.
அல்லது வீட்டில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறு, உடற்பயிற்சி இயந்திரங்களைக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
சரி, இதெல்லாம் பெரிய விஷயமாக இருந்தால் குறைந்தது போன் பேசும்போது எழுந்து நடந்தவாறே பேசலாம். தண்ணீர் குடிக்க எழுவது, காபி குடிக்க எழுவது என சின்ன சின்ன விஷயங்களுக்காக வேலை நேரத்தில் எழுந்து நடக்கலாம். மேலும் வேலை நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் செல்போன், டிவியைப் பார்த்துக்கொண்டு ஒரே இடத்தில் முடங்கிப் போவதை தவிர்க்கலாம்.
மேலும் கம்பியூட்டர் முன்போ அல்லது மேஜைக்கு முன்போ அமர்ந்து வேலை செய்யும்போது நேராக உட்கார்ந்து பழக வேண்டும். மேலும் மேஜைக்கு முன்பு அமர்ந்து கொண்டு செல்போனை குனிந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இப்படி செல்போனை குனிந்து பார்க்கும்போது உடல் நேராக இருக்காது. இதனால் முதுகுவலி ஏற்படுவதோடு கண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதைத்தவிர வொர்க் ஃப்ரம் ஹோமில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை கண்வலி, கண் எரிச்சல். இதைத் தவிர்ப்பதற்கு தொடர்ந்து கண் சிமிட்டுவதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும். கூடவே அரை மணி நேரத்திற்கு ஒருமுறை லேப்டாப்பை பார்க்காமல் வேறு இடத்தில் பார்வையை செலுத்த வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றி உடல்நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments