தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களை கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையில், அவர்களை கௌரவிக்கும் வகையில், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது.
இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலைஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்து கொண்டனர். இந்தியா சினிமா என்றாலே ஆடல் மற்றும் பாடலுக்குப் பெயர் பெற்றது. இங்கு சினிமாக்கலை உருவானதிலிருந்து ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சினிமாவில் மற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட அளவிற்கு நடனக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருகிறது. தமிழ்த் திரைப்படம் உருவாக தொடங்கிய 1938 களில் தொடங்கி 2023 வரையில் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். அனைத்து நடனக்கலைஞர்களையும் நினைவு கூறும் வகையில், அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் இந்த இந்த டான்ஸ் டான் விருது விழா நடைபெற்றது.
வயதில் மூத்த கலைஞர்கள் பலரின் சாதனை பயணம் AVயாக இவ்விழாவில் ஒளிபரப்பப்பட்டது. 100 க்கு மேற்பட்ட கலைஞர்கள், இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இன்றைய தலைமுறை நடனக் கலைஞர்களே அறிந்திராத பல நடனக் கலைஞர்களின் சாதனைகள் மேடையில் தெரியவந்தபோது பலர் நெகிழ்ச்சியில் உருகினார்கள். இவ்விழாவில் தமிழ் திரையுலகில் 1938 முதல் 2023 வரை பணியாற்றிய அனைத்து நடனக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர் மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். பல மூத்த நடனக் கலைஞர்கள் தங்கள் வாழ்நாளில் தங்களுக்கான அங்கீகாரம் கிடைத்ததில், நெஞ்சம் உருகி நன்றி தெரிவித்தனர். மூத்த நடனக் கலைஞர்களுடன் இளம் நடனக்கலைஞர்கள் ஒன்றாக இணைந்து இவ்விழாவை சிறப்பித்தது மிகச் சிறப்பான வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசியபோது, ‘உங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய வணக்கம். இப்படிப்பட்ட விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் சாதனைகள் அளப்பரியது. நடனம் என்றாலே எனக்குப் பயம், நான் வேலை பார்த்த அனைத்து மாஸ்டர்களுக்கு அது தெரியும். சினிமாவில் கொடுக்கப்படும் குறைவான நேரத்தில் ஆச்சரியப்படும்படியாக கதைக்கு ஏற்றவாறு, போடப்பட்டிருக்கும் செட்டுக்கு ஏற்றவாறு, மக்களும் ரசிக்கும் வகையில், நடனத்தை அமைக்கும் உங்கள் திறமை போற்றப்பட வேண்டியது. பழைய காலப்பாடல்கள் பார்க்கும் போது, அதில் வரும் நடனம் எல்லாம் எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும், சில பாடல்கள் ஒரு நாளில் எடுத்ததாகச் சொல்வார்கள் அது மிகப்பெரிய ஆச்சரியம். உங்களைக் கௌரவிக்கும் இந்த விழாவினில் பங்கேற்றது எனக்குப் பெருமை. உங்களுடைய அனுபவங்களை எல்லாம், எங்களுக்காகப் பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி என்றார்.
முன்னணி இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இவ்விழாவில் பங்கேற்று, தன்னுடன் பணியாற்றிய மாஸ்டர்களுடன் உரையாடியதோடு அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்து தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார். நடனக் கலைஞர்களை பற்றிய வரலாற்றுப் பதிவாக நடைபெற்ற Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழாவை, முழுக்க முழுக்க, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடனக் கலைஞரான கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தன் மகள் அக்ஷதா ஶ்ரீதருடன் இணைந்து ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார். பங்கேற்ற அனைத்து திரைக்கலைஞர்களும் மாஸ்டர் ஶ்ரீதர் மற்றும் அக்ஷதா ஶ்ரீதர் அவர்களை வாழ்த்தி, நன்றி தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com