உன்னாவ் பகுதியில் மற்றொரு பயங்கரம்… வாயில் நுரைத்தள்ளி 2 தலித் சிறுமிகள் உயிரிழப்பு!
- IndiaGlitz, [Thursday,February 18 2021]
உ.பி. மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் கடந்த செப்டம்பர் மாதம் உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பலருக்கும் பீதியை ஏற்படுத்தியது. 19 வயதே ஆன தலித் சிறுமி ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு மேலும் தடயத்தை அழிப்பதற்காக அவருடைய முதுகெலும்பு முறிக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது உன்னாவ் பகுதியில் புல் வெட்டுவதற்காக சென்ற 2 தலித் சிறுமிகள் வாயில் நுரைத்தள்ளி உயிரிழந்து இருப்பதோடு மேலும் ஒரு சிறுமி உயிருக்குப் போராடி வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீஸார் 6 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். உயிரிழந்த ஒரு சிறுமியின் கழுத்தில் கர்சீப் இறுக்கப்பட்டு இருந்தது என்றும் அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்த சிறுமிகள் கடுமையான விஷத்தினால் உயிரிழந்து உள்ளனர் என்றும் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கும் விஷம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது. இதனால் 3 சிறுமிகளுக்கும் யாரோ விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணையில் தற்போது போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.