முக்கிய விருதுக்கு தேர்வாகி இருக்கும் நடிகர் அஜித் குமார், தனுஷ், ஜோதிகா…கொண்டாடும் ரசிகர்கள்!!!
- IndiaGlitz, [Monday,January 04 2021]
தென்னிந்திய சினிமாவில் 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழின் முன்னணி நடிகர்களான அஜித் குமார், தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோருக்கு விருது வழங்கப்பட இருக்கிறது. அதேபோல இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருதை நடிகர் பார்த்திபன் பெற இருக்கிறார். இந்த ஆண்டு சிறந்த தமிழ்த் திரைப்படமாக “டூ லெட்” திரைப்படம் தேர்வாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகிப் பால்கே அவர்களின் நினைவாக கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய திரைப்படத் துறையில் 2020 ஆம் ஆண்டில் சிறந்த பங்களிப்பை கொடுத்த கலைஞர்களுக்கு புத்தாண்டு தினத்தில் தாதாசாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சிறந்த படமாக இயக்குநர் செழியன் இயக்கிய “டூ லெட்“ படம் தேர்வாகி இருக்கிறது. “அசுரன்“ படத்தின் நடிப்புக்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழில் பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
மேலும் தமிழில் “ராட்சசி“ படத்தில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார். சிறந்த இயக்குநருக்கான விருதை “ஒத்தச் செருப்பு“ படத்தை இயக்கிய நடிகர் பாத்திபனும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிரூத் ரவிச்சந்திரனுக்கும் பெற இருக்கின்றனர்.
அதேபோல மலையாளத்தில் பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக பழம்பெரும் நடிகர் மோகன்லால், “அண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25“ படத்தின் நடிப்புக்காக சிறந்த நடிகராக நடிகர் சூரஜ் வெஞ்சராமுடுவும் சிறந்த நடிகை “உயாரே“ படத்திற்காக நடிகை பார்வதி திருவொத்து, சிறந்த இயக்குநருக்கான விருதை “கும்பலங்கி நைட்ஸ்“ படத்தை இயக்கிய மது சி நாராயணன், சிறந்த படமாக “உயாரே“ படமும் சிறந்த இசையமைப்பாளராக தீபக் தேவ்வும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
தெலுங்கில் பன்முகத் தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் நாகார்ஜுனா, “முகவர் சாய் சீனிவாச ஆத்ரேயா“ படத்தின் நடிப்புக்காக நடிகர் நவீன் பாலிஷெட்டி, “அன்புள்ள தோழர்“ படத்தின் சிறந்த நடிப்புக்காக சிறந்த நடிகை விருதை ரஷ்மிகா, “சாஹோ“ படத்தை இயக்கிய இயக்குநர் சுஜீத்துக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த படமாக “ஜெர்சி“ படமும் சிறந்த இசையமைப்பாளராக எஸ் தமனும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கன்னடத்தில் பன்முகத் தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக சிவ்ராஜ்குமார், “அவனே ஸ்ரீராம்நாராயணா“ படத்தின் நடிப்புக்காக நடிகர் ரஷித் ஷெட்டி, “யஜமனா“ படத்தின் சிறந்த நடிப்புக்காக நடிகை தான்யா ஹோப், சிறந்த இயக்குநராக ரமேஷ் இந்திரா மற்றும் சிறந்த படமாக “முகாஜ்ஜியா கனகசுலு“, சிறந்த இசையமைப்பாளராக வி ஹரிகிருஷ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
தென்னிந்திய திரைப்படத்துறையில் சிறந்த பங்களிப்புக்காக இவர்கள் தாதாசாகிப் பால்கே விருதுக்கு தேர்வாகி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தாதாசாகிப் பால்கே விருதுக்கு தேர்வாகும் கலைஞர்கள் அந்த ஆண்டின் இறுதியில் வழங்கப்படும் தேசிய விருதுக்கான மேடையில் பரிசை பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.