ஆட்டோ டிரைவரை பாடகராக்கிய டி.இமான்

  • IndiaGlitz, [Tuesday,June 27 2017]

ஒரு காலத்தில் இசைத்துறையிலும், திரையிசை துறையிலும் நுழைய வேண்டுமானால் சிறுவயதில் இருந்தே இசைஞானம் பெற்றவர்கள் மட்டுமே வரமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் காலம் மாற மாற, கேள்வி ஞானம் உள்ளவர்களும் இசையில் சாதனை புரியும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக தொலைக்காட்சிகளில் பாடல் போட்டிகள் நிகழ்ச்சிகள் நடந்து வருவதால் அதில் வெற்றி வெறும் பலர் திரைத்துறையிலும் நுழைந்து தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி நடித்த 'பொதுவாக என்மனசு தங்கம்' படத்தில் இசையமைத்துள்ள டி.இமான், ஒரு பாடலை ஆட்டோ டிரைவரை பாட வைத்து அசத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இசை நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் பாடியபோது அவருடைய இசைத்திறமையை கண்ட டி.இமான், இந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

கொடுத்த வாய்ப்பை ரமேஷ் நன்கு பயன்படுத்தி அருமையான கிராமிய பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும், நாளை வெளியாகும் இந்த படத்தின் பாடல்களில் அந்த பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடவுள் அருளால் ரமேஷ் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.