டவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? தமிழகத்திற்கும் பாதிப்பா?
- IndiaGlitz, [Saturday,May 15 2021]
டவ்-தே புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தறபோது கேரள மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மீனவர்கள் வரும் 17 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைக்கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பின்பு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி தற்போது புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் வரும் மே 18 ஆம் தேதி குஜராத் அருகே கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் கேரளா, தமிழகம், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இந்நிலையில் டவ்-தே புயலின் தாக்கத்தினால் தமிழகத்தில் நீலகிரி, தேனி, ஈரோடு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் எனவும் சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பொழியும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் டவ்-தே புயல் காரணமாக கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.