புயலுக்கு நடுவே ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 50 விசைப் படகுகள்… பரிதாபமான மீனவர்களின் நிலை?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 26 ஆம் தேதி நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையைக் கடந்ததும் அடுத்த புயல் வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதிகளில் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் யாரும் நவம்பர் 26-டிசம்பர் 4 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அனால் இந்த அறிவிப்பை காதில் வாங்காத சில மீனவர்கள் கடலுக்குள் சென்று கேரளப் பகுதியில் உள்ள ஆழ்கடலில் சிக்கித் தவிப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லத்தின் நீந்தகரா அருகே ஆழ்கடலில் 50 க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் அலைகளில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. படகுகளில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தொலைபேசி மூலம் அவர்களை அணுக முடியவில்லை என்றும் தகவல் கிடைத்து உள்ளது. மேலும் அந்தப் படகுகளில் எத்தனை மீனவர்கள் இருக்கின்றனர்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதனால் ஆழ்கடலில் சிக்கி தவிக்கும் படகுகளை கண்டுபிடிக்க தற்போது கடலோர காவல்படை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் இருந்தும் ஒரு சில படகுகள் மீட்பு நடவடிக்கைக்காக நீந்தகர கரைக்கு சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதனால் ஏற்பட்ட புயலுக்கு புரெவி எனவும் பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் புயல் பாம்பன் பகுதிக்கு தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும் கன்னியாக்குமரிக்கு வடகிழக்கு பகுதிக்கு சுமார் 600 கி.மீ தொலைவிலும் நிலைக்கொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் புரெவி புயல் வலுவடைந்து மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் திரிகோணமலைப் பகுதியில் கரையைக் கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இது தெற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கடற்கரையைத் தாக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தவறுதலாக சிக்கிக் கொண்ட மீனவப் படகுகளை நினைத்து பலரும் பயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மீனவர்களை மீட்கும் வேலையில் கடலோர காவல் படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout