புதுவகை மோசடி திருடர்கள்? வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
- IndiaGlitz, [Thursday,August 12 2021]
வாடிக்கையாளர்களின் செல்போனிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அதன்வழியாக வங்கி விவரங்களை சேகரிக்கும் ஒரு புதுவகை திருட்டு அதிகரித்து இருப்பதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரித்துள்ளது.
சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கு மத்திய அரசு செர்ட்இன் எனும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமைப்பானது இணைய லிங்குடன் சேர்த்து உங்கள் செல்போனுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்கள் குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளது.
காரணம் சமீபத்தில் வங்கி கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு “உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது“ என்பது போன்ற வாசகத்துடன் வங்கி லிங்கையும் இணைத்து எஸ்.எம்.எஸ்கள் அனுப்பப்படுகிறதாம். இந்த லிங்கை வாடிக்கையாளர்கள் க்ளிக் செய்து பார்த்தால் உண்மையான வங்கியைப் போலவே பக்கங்கள் ஓபன் ஆகும். இப்படி க்ளிக் செய்யப்படும் இணைய லிங்கை வைத்து ஹேக்கர்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை குறித்த விவரங்களை எளிதாக சேகரித்து விடுகின்றனர்.
பின்னர் சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு திருட்டு வேலைகளிலும் ஈடுகின்றனர். இதனால் செல்போனிற்கு இணைய லிங்கோடு அனுப்பப்படும் வங்கி எஸ்.எம்.எஸ்களை யாரும் திறக்க வேண்டாம் என்று சைபர் செர்ட்இன் பிரிவு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே பிஷ்ஷிங் எனப்படும் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் தற்போது செல்போனில் எஸ்.எம்.எஸ் வாயிலாக விவரங்கள் சேகரிக்கப்படும் புதுவகை திருட்டு பலரையும் அச்சமடைய வைத்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இனி செல்போனிற்கு இணைய லிங்க் வைத்து அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்களை க்ளிக் செய்யவேண்டாம். இதுகுறித்த ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக வங்கியை அணுகுவது நல்லது.