கொரோனா அச்சம் எதிரொலி: சாலையில் இருந்த பணத்தை கண்டுகொள்ளாத பொதுமக்கள்
- IndiaGlitz, [Friday,April 17 2020]
சாலையில் 10 ரூபாய் இருந்தாலே ஓடோடிச் சென்று எடுக்கும் பொதுமக்கள் தற்போது ஆயிரக்கணக்கில் சாலையில் பணம் இருந்தும் அதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த அதிசய சம்பவம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் என்ற பகுதியில் சாலையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு கீழே சிதறிக் கிடந்தது. 20 ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், 200 ரூபா மற்றும் அதில் 500 ரூபாய் நோட்டுக்கள் சாலையில் சிதறிக் கிடந்த நிலையில் அந்த பகுதியில் சென்ற பொது மக்களில் யாரும் அந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயற்சிக்கவில்லை. ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக எழுந்துள்ள அச்சம் காரணமாக இந்த பணத்தை யாரும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று கையுறை அணிந்து அந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். அதில் மொத்தம் 6 ஆயிரத்து 480 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. சாலையில் இருந்த ரூபாயை எடுத்து கிருமிநாசினி உதவியால் சுத்தப்படுத்திய போலீசார், ‘இந்த பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்றும் இருப்பினும் சிசிடிவி கேமரா மூலம் இந்த பணத்தை தவற விட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக சாலையில் இருந்த பணத்தைக் கூட பொதுமக்கள் கண்டு கொள்ளாத சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது