கொல்கத்தாவுக்கு அக்னிப் பரீட்சை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொல்கத்தாவுக்கு அக்னிப் பரீட்சை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் என நம்பப்படுகிறது.
அபுதாபியில் நடக்கும் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா, மூன்று தோல்விகளுக்குப் பிறகு அட்டகாசமான வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் சென்னை அணியை எதிர்கொள்கிறது.
ஊசலாடும் மிடில் ஆர்டர்
பஞ்சாப் அணிக்கு எதிரான தங்களின் சிறந்த பார்மை ஷேன் வாட்சனும் ஃபாஃப் டூ பிளஸியும் தொடர வேண்டும். இவர்கள் நின்று ஆடிவிட்டால் பிரச்சினை இல்லை. ஒருவேளை இவர்கள் விரைவாக வெளியேறும் பட்சத்தில் சென்னையின் தலையெழுத்து ஊசலாடும் அதன் மிடில் ஆர்டரின் கையில் போய்விடும்.
நல்ல ஃபார்மில் இருக்கும் அம்பத்தி ராயுடு காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு ஆடிய ஆட்டத்தில் டக் அவுட்டானார். கேதார் ஜாதவ் இன்னமும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சாம் கரனுக்குப் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. ரவீந்திர ஜடேஜாவும் மகேந்திர சிங் தோனியும் தலா ஒரு போட்டியில் மட்டுமே நன்றாக ஆடியிருக்கிறார்கள். ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தோனி ஆறுதல்
தோனி முன்னதாகக் களமிறங்குவது ஆறுதலான விஷயம் என்றாலும் பழையபடி போட்டியை முடித்து வைக்கும் வேகம் அவரிடம் இப்போது இல்லை. அவரின் உடல் திறன் குறித்தும் பல விமர்சனங்கள் எழத் துவங்கியுள்ளன. இதனால் இளம் வீரர்களை முன்னதாக களமிறக்கிவிட்டு தனது பழைய இடமான 7ஆவது இடத்திற்கு இவர் திரும்பும் திட்டமும் உள்ளதாகத் தெரிகிறது.
பெஞ்ச்சைத் தேய்க்கும் வீரரகள்
சென்னை அணியின் பெரும்பாலான வீரர்கள் பெஞ்ச்சை தேய்ப்பது வருத்தம் அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மற்ற அணிகளில் வெற்றிக் கூட்டணியாக இருந்தாலும் சுழற்சி முறையில் பல வீரர்களும் வாய்ப்பு பெற்றுவருகின்றனர். ஆனால் தோனி அணியினரைக் கடைசிவரை பிடிவாதமாக மாற்றாமல் இருப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது.
ஏகப்பட்ட சிக்கல்கள்
மறுபுறம் கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்குப் பல விதத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் தொடரில் மிரட்டிய டாம் பாண்டனை விட்டுவிட்டு இன்னும் சுனில் நரேனைத் துவக்க வீரராகக் களமிறக்குவது வியப்பை ஏற்படுத்துகிறது. டாம் பாண்டனை அணியில் சேர்த்தால் யாரை நீக்குவது என்னும் குழப்பமும் இருக்கிறது. ரரேன் தொடக்க ஆட்டக்காரராகச் சோபிக்கவில்லையே தவிர, பந்து வீச்சில் இன்னமும் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறார். எனவே அவரை நீக்குவது இயலாத காரியம்.
அனுபவ வீரர்களான இயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸல் ஆகியோரைப் பயன்படுத்தும் விதமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. கொல்கத்தா அணியில் பவுலிங்கிற்கு பல்வேறு ஆப்ஷன்கள் இருந்தாலும், கார்த்திக் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இரு அணிகளும் 200 ரன்களுக்கு மேல் எடுத்தபோது, பவுலர்கள் தான் வெற்றியையே தீர்மானித்தனர். அதில் கொல்கத்தா பவுலர்கள் நிச்சயமாக கோட்டைவிட்டார்கள் என்பது கண்கூடாகவே தெரிந்தது. அதனால் பவுலர்களைத் தேர்வு செய்வதிலும் தினேஷ் கார்த்திக் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக அந்த அணியின் சைனாமேன் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை கார்த்திக் சரியாக பயன்படுத்தவில்லை எனலாம்.
இதையெல்லாம் சரி செய்யவில்லை என்றால் நிச்சயமாக கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டனை மாற்றும் முடிவுக்குத் தள்ளப்படும் எனத் தோன்றுகிறது.
இது வரலாறு
இரு அணிகளும் முன்னதாக 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. சென்னை அணி அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிராக 205 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்த பட்சமாக 55 ரன்கள் பதிவு செய்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் லெவன்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ பிளஸி, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், சார்துல் தாகூர், தீபர் சாஹர், ப்யூஸ் சாவ்லா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷுப்மன் கில், சுனில் நரேன், தினேஷ் கார்த்திக், நிதீஷ் ராணா, இயான் மோர்கன், அண்ட்ரே ரஸல், நிகில் நாயக், பேட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், ஷிவம் மவி, சந்தீப் வாரியர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com