ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - ஹைதராபாத் மல்லுக்கட்டி வீழ்ந்த சிஎஸ்கே!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் எதிர்பார்த்தது போல அம்பத்தி ராயுடு, டுவைன் பிராவோ, சார்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பல வாய்ப்புகளை வீணடித்த முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஹேசில்வுட் ஆகியோர் நீக்கப்பட்டனர். ஹைதராபாத் அணி எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த போட்டியின் வெற்றிக் கூட்டணியுடன் களமிறங்கியது.
அடுத்தடுத்த அடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த போட்டிகளைப் போல இல்லாமல் அசத்தலான ஆரம்பம் கொடுத்தனர். போட்டியின் முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே பேர்ஸ்டோவை (0) சாஹர் வெளியேற்றினார். பின் வந்த மனீஷ் பாண்டேவை (29) சார்துல் தாகூர் அவுட்டாக்கினார்.இதன் பின் வந்த கேன் வில்லியம்சன் கேப்டன் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஒருபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வார்னர் அதிரடி காட்டத் துவங்கினார். ஒரு கட்டத்தில் சாவ்லா சுழலில் மிரட்டல் பீல்டர் டூ பிளஸியின் அசத்தல் கேட்ச்சில் வார்னர் (29) அவுட்டானார். அடுத்த பந்திலேயே கேன் வில்லியம்சனும் (9) ரன் அவுட்டாக ஹைதராபாத் அணியின் ரன் வேகம் சரிந்தது.
கருணை காட்டாத கார்க்
பின் களமிறங்கிய கார்க் சிறு அலையாக துவங்கிப் பின் பெரும் சுனாமியாக அவதாரம் எடுத்தார். அபிஷேக் ஷர்மா கம்பெனி கொடுக்க, கார்க் கருணையே இல்லாமல் சென்னை அணி பவுலர்களைப் பதம் பார்த்தார். வெறும் 23 பந்தில் அரைசதம் கடந்த கார்க், ஹைதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எட்ட உதவினார்.
மாறாத பழைய பல்லவி
எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இம்முறையும் சொதப்பலான துவக்கமே அமைந்தது. புவனேஸ்வர் அசத்தல் சுவிங்கில் முதலில் வாட்சன் (1) போல்டானார். அடுத்து வந்த ராயுடு (8) நடராஜன் வேகத்தில் சிக்கினார். நடராஜன் வீசிய போட்டியில் 6ஆவது ஓவரின் கடைசி பந்தில் டூ பிளஸி (22) ரன் அவுட்டாக, பவர் ப்ளே ஓவர்களின் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துப் பரிதாபமான நிலையை எட்டியது.
ஆமை வேகம்
இந்த முறை 5ஆம் இடத்தில் தோனி இறங்கினார். அவருக்கு முன்பே களமிறங்கி ஆடிக்கொண்டிருந்த கேதார் ஜாதவ் 10 பந்துகளில் 3 ரன் மட்டுமே எடுத்து வார்னரின் மிரட்டலான கேட்சில் வெளியேறினார். அதன் பிறகு ஆட்டத்தின் வேகம் மட்டுப்பட்டது. போட்டியின் 10ஆவது ஓவரை ரஷீத் கான் வீச, தோனியும் ரவீந்திர ஜடேஜா அதில் 1 ரன் மட்டுமே எடுத்தனர். இதனால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 12ஐ எட்டியது. எளீதில் எடுக்ககூடியது என்று கருதப்பட்ட இலக்கு மலைப்பைத் தந்தது. ரஷீத் கானின் அடுத்த ஓவரிலும் இந்த ஜோடி வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். தொடர்ந்து இந்த ஓவரில் இவர்கள் அதிரடி காட்டுவார்கள், அடுத்த ஓவரில் இவர்கள் அதிரடி காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்துச் சலித்துப்போய்விட்டனர். அந்த அளவு ஆமை வேகத்தில் இருந்ததது இவர்களின் ஆட்டம்.
கடைசியில் 30 பந்துகளில் 86 ரன்கள் தேவை என்னும் நிலை வந்தது. இதன் பிறகும் தோனியின் பாச்சா எதுவும் பலிக்கவில்லை. ஒருவழியாகக் கொந்தளித்த ரவிந்திர ஜடேஜா புவனேஸ்வர் குமார் வீசிய போட்டியின் 17ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். இவர் அரைசதம் கடந்து (50) நடராஜன் வேகத்தில் வெளியேறினார்.
கடைசி இரண்டு ஓவர்களில் 44 ரன் எடுக்க வேண்டியிருந்தது. 19ஆவது ஓவரைப் போட வந்த புவனேஸ்வர் ஒரே ஒரு பந்து வீசிய நிலையில் தசைப் பிடிப்பு காரணமாகத் தொடர்ந்து போட முடியாமல்போனது. மீதியுள்ள 5 பந்துகளைக் கலீல் அகமது வீச, தோனி 15 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டும் எடுக்க, ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
வழக்கமான சொதப்பல்
வார்னர், வில்லியம்சன் வெளியேறிய போது ஹைதராபாத் அணி 11 ஓவரில் வெறும் 69 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. அதன் பின் இளம் வீரர்களான கார்க், அபிஷேக் சேர்ந்து 9 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலர்கள், ஃபீல்டர்களின் கடைசி நேர சொதப்பலின் பங்கும் அடங்கியிருந்தது.
வெண்ணை விரல்கள்
போட்டியில் 18 ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்தில் ஹைதராபாத் வீரர் அபிஷேக் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை சென்னை வீரர்களான ரவீந்திர ஜடேஜா, சார்துல் தாகூர் ஆகியோர் கோட்டைவிட்டனர்.
பயிற்சி தேவை
முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பல கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டனர். இதன் பின் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர், சென்னை அணி வீரர்களுக்கு கேட்சிங் பயிற்சி அவசியம் தேவை என விமர்சித்திருந்தார். அதற்கு ஏற்ப இன்றும் சென்னை வீரர்கள் சொதப்பினர்.
தவறவிட்ட வார்னர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது அசத்தலான பார்மை இந்தாண்டு லீக் போட்டியிலும் தொடரத் தவறினார். இந்த லீக் போட்டிக்கு முன்பாக வார்னர் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக பங்கேற்ற ஐந்து இன்னிங்ஸ்களில் (90, 53, 61, 50, 57) அரை சதம் கடந்திருந்தார். ஆனால் இந்த அசத்தல் பார்மை வார்னர் இந்த ஆண்டு தொடர தவறினார். இப்போட்டியில் 29 ரன்னில் அவுட்டானார்.
தோனி சாதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் களமிறங்கியன் மூலம் தனது 194 ஆவது ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகப் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக இப்பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். ரெய்னாவுக்கு மிஸ்டர் ஐபிஎல் என்ற செல்லப் பெயரும் உண்டு. இப்போட்டியில் தோனி 24 ரன்கள் அடித்த போது ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் 4500 ரன்கள் என்ற புது மைல்கல்லை எட்டினார். தோனி இந்தச் சாதனைகளை நினைத்து மகிழும் நிலையில் நேற்று ஆட்டம் அமையவில்லை.
சுருக்கமான ஸ்கோர்:
ஹைதராபாத்: 164/5
சென்னை: 157/5
ஆட்ட நாயகன்: பிரியம் கார்க்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments