நெருக்கடியில் தோனியின் படை!
- IndiaGlitz, [Friday,October 02 2020]
நெருக்கடியில் தோனியின் படை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் துபாயில் இன்று நடக்கும் 14ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியைப் பொருத்தவரையில், இது வரை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவு படுமோசமான துவக்கத்தை அளித்துள்ளது. இதற்கு ரெய்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இல்லாதது ஒரு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் அனுபவ கேப்டன் தோனி தலைமையிலான
சீனியர் படையான சென்னை இது போன்ற காரணங்களைக் கடந்து சாதிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
எழுச்சி தேவை
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் எழுச்சி பெற்று வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் அரங்கின் புள்ளிப் பட்டியலில் அதள பாதாளத்தில் உள்ளது சென்னை அணி. இதற்கு அந்த அணியின் மோசமான ரன் ரேட் (-0.840) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
எங்கு தவறு
சென்னை அணி இதுவரை பங்கேற்ற போட்டிகளில் ஒரு சில வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அணியாக சிறப்பாகச் செயல்படவில்லை. பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு, டூ பிளஸி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் ராயுடுவின் காயம் சென்னை அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. பவுலிங்கிலும் இளம் சாம் கரன் ஒருவர் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார். இதனால் இன்று சென்னை அணியில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக ராயுடு,
டுவைன் பிராவோ ஆகியோர் ஹைதராபத் அணிக்கு எதிரான போட்டிக்கான அணித் தேர்வுக்குத் தயாராக இருக்கும் தகவல் சென்னை அணி வீரர்களுக்கு ஆறுதலான விஷயம்.
மீண்டு வந்த ஹைதராபாத்
அதே நேரம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரு தோல்விகளைச் சந்தித்து டெல்லி அணிக்கு எதிராக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. அந்த அணியின் முக்கியமான வீரர்களாகக் கருதப்படும் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங்கைப் பார்த்துக்கொள்ள, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார் ஆகியோர் பவுலிங்கை கவனித்துக்கொள்கின்றனர். இதனால் சென்னை பேட்ஸ்மேன்களுக்கும் பவுலர்களுக்கும் கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமே
இல்லை. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் டி.நடராஜன் சிறப்பான முறையில் பந்து வீசிவருகிறார்.
இக்கட்டான நிலை
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தாலும், இந்த இரு அணிகளும் ஏற்கனவே இரு தோல்விகளைச் சந்தித்துவிட்டன. இன்னும் சில தோல்விகள் இரு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கான நெருக்கடியை அதிகரிக்கும் என்பதால் வெற்றி பெற இன்று
கடுமையாக முயற்சிக்கும்.
இது வரலாறு
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை இரு அணிகளும் 12 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது. ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. வரலாறு சென்னை அணிக்குச் சாதமாக இருந்தாலும் சமீபத்திய ஐபிஎல் போட்டிகளின் முடிவை வைத்துப் பார்க்கும் போது அந்நிய மண்ணில் வெற்றி யாருக்கும் வசப்படலாம் என்பது தெளிவாக தெரிகிறது.
எதிர்பார்க்கப்படும் அணி:
சென்னை சூப்பர் கிங்ஸ்: அம்பத்தி ராயுடு, ஃபாஃப் டூ பிளஸி, கேதார் ஜாதவ், ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திர சிங் தோனி, சாம் கரன், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹார், பியூஷ் சாவ்லா, ஜாஸ் ஹேசில்வுட்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, அப்துல் சமத், அபிஷேக் ஷர்மா, பிரியம்கார்க், ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது,
டி நடராஜன்.