மகாராஷ்டிராவிலும் கர்ஜித்த சென்னை சிங்கங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
புனே மைதானத்தை இந்த சீசனின் 'ஹோம்' கிரவுண்டாக ஏற்றுக்கொண்டாலும், ஐபிஎல் தொடங்குவதற்கு 20 நாட்கள் முன்பாகவே சென்னையில் தங்கி சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு 7 போட்டிகளை சேப்பாக்கத்தில் எப்படி வசப்படுத்துவது என்று பிளான் போட்டப்பிறகு வேறொரு இடத்தில ஆடுவது கடினமான காரியம்தான். ஆனால், எங்கு போனாலும் 'கில்லி' மாதிரி சொல்லி அடிப்போம் என்பதுபோல சென்னை நேற்று ஆடியது. 'விசில் போடு' எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் சென்னையிலிருந்து புனே சென்று தங்களது ஆதரவைத் தெரிவிக்க, புனே மக்களும் மஞ்சள் படையோடு சேர்த்துக்கொண்டு சென்னைக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்க, புனே மைதானமே சேப்பாக்கத்தின் பிரதியைப் போலத்தான் தோன்றியது. கடந்த இரண்டு வருடங்கள் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக தோனி விளையாடிய அனுபவம் இருந்தாலும், ராஜஸ்தான் அணியிலும் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகியோருக்கும் புனே மைதானம் நல்ல பரிச்சயமே., கிடைத்த
'டாஸ்' வென்று ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஸ்டூவர்ட் பின்னி, ஹென்றிச் க்ளாஸன் ஆகியோரை டார்சி ஷார்ட் மற்றும் தாவல் குல்கர்னிக்கு பதில் அணிக்குள் கொண்டுவந்தார்கள். ஆட்டத்தின் துவக்க ஓவரில் ஸ்டூவர்ட் பின்னிக்கு அட்டகாசமாக பந்தை ஸ்விங் செய்ய முடிந்தது. இதன் விளைவாக வாட்சனின் விக்கட்டை வீழ்த்தும் வாய்ப்பும் அமைந்தது. நூற்றுக்கு நூறு முறை பிடிக்கக்கூடிய காட்ச்சை ராகுல் திரிபாதி தவறவிடவே, கிடைத்த வாய்ப்பை கட்சிதமாக பற்றிக்கொண்டார், வாட்சன். முதல் ஓவரிலிந்து அதிரடி ஆட்டத்தை வாட்சன் வெளிப்படுத்தவே, ஒவ்வொரு ஓவருக்கும் ஒவ்வொரு பௌலரை மாற்றிக்கொண்டிருந்தார், ரஹானே.
பொதுவாக ஒரு அணியில் ஒன்றுக்கு மேற்பட்ட விக்கட் கீப்பர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள்தான் 'ஸ்லிப்' ஃபீல்டர்களாக இருப்பார்கள். நேற்று, சஞ்சு சாம்சன், க்ளாஸென், மற்றும் ரஹானே போன்ற மூன்று பிரமாதமான ஃபீல்டர்கள் இருந்தபோதும் திரிபாதி ஸ்லிப்பில் நின்றது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஐந்தாவது ஓவரில் ஐம்பது ரன்களை கடந்த வேளையில் ராயிடு வெளியேற, காயம் காரணமாக முதல் முறையாக ஒரு சென்னைக்காக ஒரு போட்டியைத் தவறவிட்ட ரெய்னா வாட்சனுடன் வேலையைக் காட்ட ஆரம்பித்தார். பென் ஸ்டோக்ஸ் வீசிய ஆறாவது ஓவரில் தொடர்ந்து நான்கு பௌண்டரிகள் விலாசி பவர் ஆறு ஓவர்கள் இறுதியில் 69 ரன்களை குவித்தது சென்னை. அதன் பின்னர் ஷ்ரேயாஸ் கோபால், கெளதம் கிருஷ்ணப்பா ஆகியோரின் பந்துவீச்சை பொறுமையாக அணுகி மோசமான பந்துகளை மட்டும் பௌண்டரிக்கு விரட்டி பெரிய எண்ணிக்கையை நோக்கி நகர வாட்சன் ரெய்னா அடித்தளம் போட்டனர்.
46 ரன்கள் குவிந்திருந்த நிலையில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு ரெய்னா வெளியேற, சென்ற போட்டியில் வாணவேடிக்கை காட்டிய 'தல' நான்காவது வீரராக களமிறங்கியது ஆச்சர்யமூட்டியது. 7 ஓவர்கள் மீதமிருக்கையில் 150 ரன்களைக் கடந்துவிட்ட சென்னை நிச்சயம் 220 ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தோனி தன்னுடைய மூன்றாவது பந்திலேயே வெளியேற, அதன் பின்பு வந்த பில்லிங்ஸ் பெரிதும் கைகொடுக்காமல் விக்கட்டை இழக்க, வாட்சன் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு சென்னை அணியில் ஸ்கோர் மிகவும் பின்தங்கிவிடாதவாறு பார்த்துக்கொண்டார். தன்னுடைய 51வது பந்தில் ஐபிஎல் போட்டிகளில் வாட்சன் மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் 106 ரன்களில் வாட்சன் வெளியேற சென்னை 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இறுதியில் 42 பந்துகளில் வெறும் 54 ரன்களை எட்டியது ஏமாற்றமாக இருந்தப்போதிலும், 205 என்பது கொஞ்சம் சவாலான விஷயமாகத் தெரிந்தது ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டபோது.
வாட்சனுக்கு எவ்வாறு திரிபாதி ஒரு மறுவாழ்வு அளித்தாரோ அதை வாட்சன் திருப்பித் தந்தார். ஆட்டத்தின் இரண்டாவது பதில் க்ளாஸனின் கேட்சை தவறவிட்டார். க்ளாஸென் இந்திய அணிக்கு எதிராக இறந்து ஆட்டங்களில் வெற்றித் தேடித் தந்தது நினைவிருக்கலாம். ஆனால் அடுத்த ஓவரிலேயே ஷார்துல் தாகூர் க்ளாஸனை க்ளீன் போல்ட் ஆக்கினார். ராஜஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு சாம்சன் மீண்டுமொருமுறை தான் செய்த அதே தவறை செய்து தீபக் சாஹரின் பதில் ஆட்டமிழந்தது வேதனை அளித்தது. 'High Backlift' எனப்படும் பேட்டை உயர்த்திப்பிடித்து ஆடும் ஸ்டைலை கொண்ட சாம்சனுக்கு, தன்னுடைய இடுப்பு மற்றும் தோள்பட்டையை நோக்கி வீசப்படும் பௌன்சர்களை தரையோடு தரையாக ஆடத்தெரியாமல் தூக்கியடிக்க முற்பட்டு பலமுறை தன்னுடையஸ் விக்கட்டை இழக்கிறார். சிறிய மைதானங்களில் 'ஸ்கொயர் லெக்' திசையில் சில சமயங்களில் அந்த ஷாட் ஆறு ரன்களைப் பெற்றுக்கொடுத்தாலும், 65 மீட்டர்களுக்கு மேல் பௌண்டரிகள் இருக்கும் மைதானங்களில் அந்த ஷாட் எடுபடாது. மேலும் என்னதான் இருபது ஓவர் போட்டிகள் என்றாலும் கொஞ்சம் நிதானமாக 5-10 பந்துகளை எதிர்கொண்டு, களத்தின் தன்மையையும், கொஞ்சம் சுமாரான பந்துவீச்சாளர்கள் வரும்வரை அமைதிக் காப்பதும்தான் சிறந்த வீரருக்கான அடையாளம். ஆறு வருடங்களாக டிராவிட் துவங்கி பல்வேறு வீரர்களோடு பயணித்த அனுபவத்தைக்கொண்டு சாம்சன் இன்னமும் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
சாம்சனைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ரஹானேவும் நடையைக்கட்ட, ராஜஸ்தானின் தோல்வி கிட்டத்தட்ட கட்டமைக்கப்பட்டுவிட்டது. இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் கொஞ்சம் வாணவேடிக்கை காட்டினாலும் அவர்களும் எப்போது வேண்டுமானாலும் அவுட் ஆகிவிடுவார்கள் என்பதைப்போலத்தான் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
ஆடுகளம் கொஞ்சம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கவே, சாஹரை நான்கு ஓவர்கள் அடுத்தடுத்து வீசவைத்து, வாட்சனைக் கொண்டு ராஜஸ்தானின் வேகத்தை தோனி நிறுத்தவே, ஓவருக்கு 15 ரங்களுக்கு மேல் அடிக்க வேண்டுமென்கிற கட்டாயத்தில் பட்லர் வெளியேற ராஜஸ்தான் கிட்டத்தட்ட சென்னையின் பந்துவீச்சிற்கு சரணடைந்துவிட்டது.
65 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நல்ல ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஜம்மென்று சிங்கங்கள் கர்ஜித்ததுக்கொண்டிருக்கிறது. நாளை ஹைதராபாதிலும் சிங்கத்தின் வேட்டைத் தொடருமா என்று பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments