சென்னைக்குச் சவால் விடும் அந்த மூன்று பேர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னைக்குச் சவால் விடும் அந்த மூன்று பேர்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் 13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு தொடக்கம் முதலே அடிமேல் அடி விழுந்துவருகிறது. முதலில் வீரர்களுக்கு கொரோனா தொற்று. பின் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் விலகல், தற்போது தொடர் தோல்வி என மோசமான தொடராகவே இதுவரை இருந்துவருகிறது.
ஆறாவது இடம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்டப் பாதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. அதில் சென்னை அணி மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்று வெறும் 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 3 வெற்றிகளுடன் (6 புள்ளிகள்) ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கவலைக்கிடம்
முன்னதாக ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்த சென்னை அணி ஒரு வழியாகப் பஞ்சாப் அணிக்கு எதிராக மெகா வெற்றியைப் பதிவு செய்ததும் அதன் நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தொடக்கம் அமைந்தும் அது தோற்றுப்போனது. மிடில் ஆர்டர் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டியது. இதே நிலை நீடித்தால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சந்தேகம்தான்.
ஜாதவ் நீக்கம்
மிடில் ஆர்டரில் உள்ள தடுமாற்றத்தை உணர்ந்து துவக்க வீரர்களான வாட்சன், டூ பிளஸி ஆகியோர் தாக்குப்பிடித்து நின்று விளையாட முயற்சிக்க வேண்டும். கடந்த போட்டியில் மெகா சொதப்பு தொப்பிய கேதர் ஜாதவை நீக்க அணி நிர்வாகம் முடிவெடுக்கும் பட்சத்தில் கடந்த 2018 முதல் சென்னை அணியில் பெஞ்ச்சைத் தேய்க்கும் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அல்லது அம்பத்தி ராயுடு இல்லாத போது களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாடைத் தேர்வு செய்யலாம். டுவைன் பிராவோவை முன்னதாக இறக்கலாம். சாம் கரன் தனது அதிரடித் துவக்கத்தைக் கடைசி வரை தொடர முயற்சித்தால் நல்லது.
பவுலிங் ஓகே
பேட்டிங்கில்தான் சென்னை அணி பலவீனமாக உள்ளதே தவிர, பவுலிங்கில் ஓரளவு எழுச்சி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். கொல்கத்தா போட்டியில் பிராவோ, கரண் ஷர்மா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர். அதே சமயம், வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர், சார்துல் தாகூர் ஆகியோர் துவக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்த முயற்சித்தால் நல்லது.
பெங்களூர் பேட்டிங் பலம்
மறுபுறம் டெல்லி அணியிடம் தோல்வியை சந்தித்த நிலையில் பெங்களூர் அணி களமிறங்குகிறது. அந்த அணியில் தேவ்தத் படிக்கல், ஏபி டிவிலியர்ஸ், கேப்டன் விராட் கோலி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்களுடன் அதிரடி வீரரான ஆரோன் பிஞ்ச்சும் இருக்கிறார். ஃபிஞ்ச், கோலி, டிவிலியர்ஸ் ஆகிய மூவரில் இருவர் சோபித்தால் போட்டி பெங்களூர் வசம் வந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
பெங்களூர் அணியின் பேட்டிங் வலுவான கோட்டையாகத் திகழ்ந்தாலும், அந்த அணிக்கு பவுலிங் பெரும் தலைவலியாக உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சஹலும் வாஷிங்டன் சுந்தரும் மட்டுமே ஆறுதல் அளிக்கும் விதத்தில் செயல்படுகிறார்கள். உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் அதிகமாக ரன்களை வாரி வழங்கிவருகின்றனர்.
இரு அணிகளும் தற்போதுள்ள நிலையில் ஊசலாடும் கதையாகவே உள்ளது. பெங்களூரின் பந்து வீச்சில் உள்ள பலவீனத்தைச் சென்னை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக்கொண்டால் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். அதே சமயம், ஃபிஞ்ச், கோலி, டிவிலியர்ஸ் ஆகிய மும்மூர்த்திகளின் மட்டையாட்டத்தைச் சென்னை பந்து வீச்சாளர்கள் எப்படிச் சமாளிப்பார்கள் என்பதும் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கும். இந்த மூவரைக் கட்டுப்படுத்த முடிந்தால் சென்னை வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் லெவன் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஃபாப் டூ பிளஸி, ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் கரன், கரண் ஷர்மா, சார்துல் தாகூர், தீபக் சாஹர்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்: ஆரோன் ஃபிஞ்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஷிவம் துபே, ஏபி டிவிலியர்ஸ், மொயீன் அலி, யுஜ்வேந்திர சஹல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், இஸ்ரூ உதானா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com