சென்னையின் சீனியர்கள் இளம் படையைச் சமாளிப்பார்களா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் சீனியர்கள் கூடாரமான சென்னை அணி தனது வெற்றி நடையைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஷார்ஜாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 12 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டெல்லி அணியைப் பொறுத்தவரையில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமான நிலையில் உள்ளது. ஆனால் சென்னை அணிக்கு இனி வரும் 6 போட்டிகளில் குறைந்தது 4இல் வெற்றி பெற்றாக வேண்டிய இக்கட்டான கட்டத்தில் உள்ளது.
நீடிக்கும் சிக்கல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த போட்டியில் வீழ்ச்சிப் பாதையிலிருந்து மீண்டது. இருந்தாலும் சென்னை அணியின் பேட்டிங் வரிசை நிலைபெறவில்லை. பாதி ஐபிஎல் தொடர் கடந்த நிலையிலும்கூடத் துவக்க வீரர்களை மாற்றுவது, ஊசலாடும் மிடில் ஆர்டர் என பலப் சிக்கல்கள் இருக்கின்றன. இதை இன்று கேப்டன் தோனி சரி செய்ய வேண்டும்.
அதேபோல கடந்த போட்டியில் 7 பவுலர்களை மாறி மாறிப் பயன்படுத்தினார். இளம் வீரர் ஜகதீசனின் இடத்தில் சேர்க்கப்பட்ட பியுஷ் சாவ்லாவுக்கு ஒரே ஒரு ஓவர்தான் கொடுத்தார். ஷார்ஜா பவுலர்களுக்கு சாதகமற்ற ஆடுகளம். இங்கே தோனியின் இந்த உத்தி பலிக்க வாய்ப்பு குறைவுதான்.
நல்ல ஆரம்பம் தேவை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல ஆரம்பம் தேவையாக உள்ளது. ஃபாஃப் டூ பிளஸி அல்லது ஷேன் வாட்சனுடன் சாம் கரன் துவக்க வீரராகக் களமிறங்கும் பட்சத்தில் பொறுப்பாக நின்று நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை குறைக்க முடியும்.
என்ன ஆச்சு ராயுடுவுக்கு
மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிக்குக் காரணமாக இருந்த சீனியர் வீரர் அம்பத்தி ராயுடு அதன் பிறகு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ரன் எடுப்பதில் குறை வைக்கவில்லை என்றாலும் வெற்றிக்கு உதவும் வேகத்தில் இவர் ரன் எடுப்பதில்லை. அந்த வகையில் டி-20 போட்டிகளுக்கான ஃபார்மில் இவர் இல்லை என்று சொல்ல வேண்டும். மிடில் ஆர்டரில் அதிக பொறுப்பு உள்ள
இவர் ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதேபோல, கேப்டன் தோனியின் ப்னிஷிங் திறமை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஃபினிஷராகச் செயல்பட இயலாத நிலையில் இடைநிலையில் வந்து பிறருக்குத் துணையாக நின்று இன்னிங்ஸை வழிநடத்திச் சென்று அணியை வெற்றிபெற வைக்க வேண்டும்.
எழுச்சி தேவை
கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவைப் போல டுவைன் பிராவோவும் பேட்டிங்கில் கைகொடுக்க முயற்சித்தால் நல்லது. பவுலிங்கைப் பொறுத்தவரையில் தீபக் சாஹர் எழுச்சிபெற வேண்டும். கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதால் இவர் விக்கெட் வீழ்த்தத் தவறியது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சார்துல் தாகூர், கரண் ஷர்மா ஆகியோர் ஆறுதல் அளிக்கின்றனர். கரண் கடந்த போட்டியில் சரியாகப் போடவில்லை. பியூஷ் சாவ்லா இருக்கும் நிலையில் கரணுக்குப் பதில் ஜகதீசனைச் சேர்த்தால் மட்டை வரிசை வலுப்பெறும். பிராவோ ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
துடிப்பான படை
டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரையில் பிரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர், அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் என அடுத்தடுத்து சென்னை அணி பவுலர்களுக்கு கடும் சவால் அளிக்கக் காத்திருக்கின்றனர்.
பவுலிங்கில் காகிசோ ரபாடா, ஆன்ரிக் நோர்க்கியா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல் ஆகியோர் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களுக்குத் தலைவலி கொடுக்கக் காத்திருக்கின்றனர்.
சீனியர் - ஜூனியர் போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அப்படியே நேர்எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி உள்ளது. இந்த போட்டி சீனியர்கள் அணிக்கும் ஜூனியர்கள் அணிக்குமான போட்டியாக கருதப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலான வீரர்கள் அதிக அனுபவம் கொண்ட வீரர்களாகவே உள்ளனர். ஆனால் டெல்லி அணியில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களாக உள்ளனர். இதனால் இன்று விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
சிறிய மைதானம்
இன்று போட்டி நடக்கும் ஷார்ஜா மைதானம் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் துபாய், அபுதாபி ஆகிய மைதானங்களைவிடச் சிறியது. இங்கு சராசரி ஸ்கோரே 170 ஆகும். இதனால் இன்று ரன் மழையை எதிர்பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்து, டெல்லி பேட்ஸ்மேன்கள் மீது நெருக்கடியை அதிரித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு அதிகம். அல்லது சென்னை பவுலர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
உத்தேச லெவன் அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ பிளஸி, சாம் கரன், அம்பத்தி ராயுடு, எம்.எஸ். தோனி, ஜகதீசன் / பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, கரண் ஷர்மா, தீபக் சாஹர், சார்துல் தாகூர்
Delhi Capitals (DC) Probable XI: ஷிகர் தவன், பிரித்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், அஜிங்க்ய ரஹானே, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அலெக்ஸ் கேரி, அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், காகிசோ ரபடா, ஆன்ரிக் நோர்க்கியா சந்தீப் லாமிச்சானே