சீன தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட்: சிஎஸ்கே டாக்டர் பதவி நீக்கம்
- IndiaGlitz, [Wednesday,June 17 2020]
இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இருதரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீன தரப்பில் 35 ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் சீனாவின் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சீன தாக்குதலுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியா எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று எதிர்க் கட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சீன தாக்குதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவரான டாக்டர் மது தொட்டபிளில் என்பவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர் அந்த டுவிட்டை டெலிட் செய்துவிட்டார்.
இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டாக்டர் மது தொட்டபிளில் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருடைய தனிப்பட்ட டுவிட்டை தாங்கள் கவனிக்கவில்லை என்றும் இது குறித்து தங்கள் கவனத்திற்கு வந்த உடன் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.