ஸ்டைலா கெத்தா திரும்பி வந்த சிஎஸ்கே!
Send us your feedback to audioarticles@vaarta.com
மஞ்சர் படை வீரர்கள் சேப்பாக்கத்தில் அணிவகுத்து 1000 நாட்களுக்கு மேலாகிவிட்டது. நேற்றைய போட்டியும் ஆரம்பிக்கும் வரை நடக்குமா நடக்காதா என்கிற பதட்டத்திலேயே கழிய, ஒரு வழியாக 7.30 மணிக்கு போட வேண்டிய டாஸ் 7.45 மணிக்கு போடப்பட்டது. டாஸ் வென்ற தோனி மீண்டும் பௌலிங்கை தேர்ந்தெடுத்தார். மேலும் எவ்வளவு முறை 'சேஸ்' செய்ய முடியுமோ அவ்வளவு முறை 'சேஸ்' செய்வதை விரும்புவதாகவும் தெரிவித்தார்.
முதல் போட்டியில் மும்பை அணியினரை தன்னுடைய 'ஸ்விங்' மூலம் சிதறடித்து தீபக் சாஹர் மீண்டும் முதல் ஓவரை வீசினார். சென்ற ஆண்டிலிருந்து துவக்க வீரராக களம் காணும் சுனில் நரேன் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு முதல் ஓவரிலேயே 18 ரன்கள் குவிக்க, சரி, இன்று தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமாகினர். சுனில் நரேனை சமாளிக்க இரண்டாவது ஓவரை ஹர்பஜனிடம் தோனி கொடுக்க உடனே பலன் கிடைத்தது. சுரேஷ் ரெய்னா லாவகமாக ஓடிச் சென்று வானத்திலிருந்து வீழும் நட்சத்திரத்தை விழுங்கும் கடலைப்போல பந்தை வசப்படுத்தினார். ராபின் உத்தப்பா, கிரிஸ் லின்னுடன் சேர்ந்து பவர் பிளே முடிவதற்குள் 60 ரன்களைத்தாண்ட, ஜடேஜா தன் பங்கிற்கு லின்னை வெளியேற்ற ஆட்டம் சமநிலையை அடைந்தது. நிதிஷ் ராணா அதிகம் நீடித்திருக்கமால் வாட்சன் பந்தில் தூக்கியடிக்க முற்பட்டு தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்த பந்திலேயே தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பாவை ரன் அவுட்டாக்க டக்கென்று மெரினா காத்து சென்னை அணி பக்கம் இதமாக அடித்தது. சுரேஷ் ரெய்னா தன்னுடைய ஃபீல்டிங் மூலம் அணிக்கு இல்லாத வாய்பபை உருவாக்கித் தந்தார்.
10 ஓவர்கள் முடிவில் 89/5 என்ற நிலையில் 170 ரன்கள் அடித்தால் அதிசயம் என்ற நிலையை தினேஷ் கார்த்திக்-ரஸ்ஸல் ஜோடி தவிடுபொடியாக்கியது. குறிப்பாக ரஸ்ஸல் உள்ளே வந்ததும் அடித்து ஆட ஆரம்பித்துவிட்டார். ப்ராவோவை இறுதி ஓவர்களுக்கு சேமித்து வைத்திருந்த பிளானும் சென்னைக்கு பலிக்கவில்லை. ப்ராவோவின் பந்துகளையே அடுத்தடுத்து சிக்ஸர்களாக பறக்கவிட்டதால் செய்வதறியாது திணறினார் தோனி. ஒரு பக்கம் ப்ராவோவை அடித்தால் மறுபக்கம் ஷார்துல் தாக்கூர் என எல்லோரும் வாரி வாரிக்கொடுக்க ஒரு கட்டத்தில் 160க்கூட தாண்டாது என்ற நினைத்த கொல்கத்தா 202 ரன்களை குவித்தது.
முதல் போட்டியைப்போலவே துவக்க வீரர்களாக வாட்சனும் ராயுடுவும் களமிறங்க, முரளி விஜய் மீண்டும் சென்னை அணிக்குத் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். முதல் இரண்டு பந்துகளில் ரன்களை ஏதும் சேர்க்காவிடினும் அடுத்ததடுத்த பந்துகளில் 2,4,6,4 என்று அடித்து முதல் ஓவரிலேயே 16 ரன்களைக் குவித்தார் வாட்சன். ராயுடுவும் தன்னுடைய பங்கிற்கு ஸ்ட்ரைக்கை வாட்சனுக்கு மாற்றியும் கிடைக்கும் சந்தர்ப்பங்களின் பௌண்டரிகளை விலாச, 4 ஓவர் இறுதிக்குள் 50 ரன்களை எட்டியது சென்னை. பவர் பிளே முடியும் தருவாயில் வாட்சன் ஆட்டமிழக்க சென்ற ஆட்டம் போலவே ரெய்னாவும் ராயுடுவும் அடுத்தடுத்து வெளியேற, தோனி வழக்கம் போல நிதானமாக ஆடி ஆட்டத்தை நீட்டித்தார். இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ் அவ்வப்போது பட்டாசு கொளுத்த தோனி தன்னுடைய பங்கிற்கு ஒரேயொரு சிக்ஸர் அடிக்க சேப்பாக்கம் உயிர்த்தெழுந்து.
பியூஷ் சாவ்லா லெக் ஸ்பின் போடுவதை நிறுத்திவிட்டு ஒரேயடியாக நான்கு ஸ்டெப்பில் வேகமாக பந்துவீசிக்கொண்டிருக்கிறார். அது ஓரளவிற்கு அவருக்கு கைகொடுக்கவும் செய்கிறது. தோனி பொறுத்தது போதும் பொங்கியெழு என்கிற கட்டத்தில் அடிக்க முற்பட்டு இன்சைட் எட்ஜ் வாங்கி தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடிக்க முக்கியமான கட்டத்தில் அவுட் ஆனார்.
ப்ராவோ வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா வரவே கொஞ்சம் குழம்பினர் ரசிகர்கள். ஆனால் ஒரு பக்கம் சாம் பில்லிங்ஸ் யார் போட்டாலும் சிக்ஸர்கள் பறக்கவிட எதிரே யார் நின்றால் என்னவென்பதுப்போல ஆடிக்கொண்டிருந்தார். பதினெட்டாவது ஓவரில் ரஸ்ஸலின் யார்க்கரை ஸ்கூப் செய்ததாகட்டும் அடுத்த பந்தே 'பேக் ஃபுட்டில்' சென்று அடித்த சிக்ஸர் இன்னமும் அட்டகாசம்.
19வது ஓவரில் பில்லிங்ஸ் வெளியேற சென்ற போட்டியின் ஹீரோ பிராவோ களமிறங்கினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்கவேண்டியிருந்த நிலையில் 'தவாணகிரி' எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வினய் குமார் பந்துவீச வந்ததுமே சேப்பாக்கமே குதூகலமடைந்து விட்டது. ஏனெனில் இதே போன்ற சூழ்நிலையில் சென்னை அதிகமுறை வெற்றிப்பெற்றதாலும் மற்றவர்களை விட வினய் குமாரின் பந்துகளை எளிதாக அடிக்க இயலும் என்கிற நம்பிக்கையாலும். முதல் பந்தையே ப்ராவோ சொழட்டி அடிக்க சிக்ஸராக மாறியது. மேற்கொண்டி அது நோ பால் என்று மாறவும் வெற்றி நிச்சயமானது. அடுத்தடுத்த பந்துகளில் வினய் சுதாரித்துக்கொள்ள 2 பந்துகளில் 4 ரன்கள் என்றத் தேவையில் அது வரை பொறுமையாக 1,2 ரன்கள் அடித்துக்கொண்டிருந்த ஜடேஜா தூக்கி சிக்ஸர் அடிக்க மீண்டுமுறை இறுதி ஓவர்களில் இதயத் துடிப்பபை அதிகரிக்கச் செய்தது சென்னை.
- பத்மநாபன் நாகராஜ்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments