ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - கொல்கத்தா சென்னையின் வெற்றி கை நழுவிப் போனது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அபுதாபியில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை அணியில் பியூஷ் சாவ்லாவுக்குப் பதிலாக கரன் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
திரிபாதி அசத்தல்
கொல்கத்தா அணிக்கு ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில் ஜோடி வலுவான துவக்கத்தை அளித்தது. சற்றே மந்தமாக ஆடிக்கொண்டிருந்த கில் (11) சார்துல் தாகூர் வேகத்தில் வெளியேறினார். அதன் பின் வந்த நிதிஷ் ரானா (9) கரன் சர்மா சுழலில் சிக்கினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திரிபாதி அரை சதம் கடந்தார்.
மிரட்டல் வீரர்கள் ஏமாற்றம்
தொடர்ந்து வந்த அதிரடி வீரர்களான சுனில் நரேன் (17), மார்கன் (7), ரசல் (2) என கொல்கத்தா அணியின் மிரட்டல் அடி வீரர்கள் அடுத்ததடுத்து வெளியேற அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. இவர்கள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே திருப்பதியும் (81) அவுட்டாக அந்த அணி ஆட்டம் கண்டது.
சிறந்த துவக்கம் அமைந்தபோதும் அதை மேலெடுத்துச் செல்ல முடியாமல் அந்த அணி தடுமாறியது கண்கூடாகவே தெரிந்தது. சென்னை ஆல்ரவுண்டர்களான சாம் கரன், டுவைன் பிராவோ ஆகியோர் தங்கள் பங்கிற்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் (12), கமலேஷ் நாகர்கோடி (0) ஆகியோரை வெளியேற்ற, அந்த அணி 20 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வாட்சன் அபாரம்
எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய சென்னை அணியின் ஆட்டத்தை ஷேன் வாட்சன், டூ பிளஸி ஜோடி தொடங்கியது. இம்முறை டூ பிளஸி (17) விரைவாக வெளியேறினார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (30) ஓரளவு கைகொடுத்தார். மறுபுறம் வாட்சன் சீரான இடைவேளையில் பவுண்டரிகள் விளாசினார். இந்த ஜோடி மிகவும் சீரான வேகத்தில் எந்தக் கஷ்டமும் இன்றி வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அம்பத்தி ராயுடு நாகர்கோடி வீசிய சாதாரணமான ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் பந்தில் புல் ஷாட் அடித்து ஃபீல்டரின் கையில் பந்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
அணியைக் கரைசேர்க்கக் கேப்டன் தோனி களமிறங்கினார். ஆனால், மிக விரைவிலேயே வாட்சன் (50) நரேன் சுழலில் வீழ்ந்தார். பிறகு சாம் கரன் தோனியுடன் இணைந்தார். இந்தச் சமயத்தில் நரேனும் வருண் சக்கரவர்த்தியும் சிறப்பாகப் பந்து வீசியதால் இவர்களால் வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. எடுக்க வேண்டிய ரன் விகிதம் அதிகரித்துவந்த நிலையில் விக்கெட்கள் விழத் தொடங்கின.
மிரட்டிய ரசல்
வருண் சக்கரவர்த்தி சுழலில் தோனி (11) அவுட்டானார். விரைவிலேயே சாம் கரனும் (17) வெளியேறினார். பின் வந்த கேதர் ஜாதவ் வழக்கமான தடுமாற்றத்தை வெளிப்படுத்த, சென்னை அணியின் வசம் இருந்து போட்டி மெல்ல மெல்ல நழுவிச் சென்றது. போட்டியின் 18ஆவது ஓவரை அதுவரை ஒரு ஓவர் கூட வீசாத ஆண்ட்ரே ரஸல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரனின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் மிரட்டலான இரண்டு பவுன்சர்கள் வீசினார். அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த ஓவர்தான் சென்னை அணியின் வெற்றி வாய்ப்புக்கு ‘சீல்’ வைத்துவிட்டது என்று சொல்லலாம்.
17ஆம் ஓவரின் முடிவில் சென்னை அணிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 13 ஆக இருந்தது. ரஸல் வீசிய 18ஆம் ஓவரின் முடிவில் அது 18ஆக மாறியது.
19ஆவது ஓவரை வீசிய சுனில் நரேனும் அந்த நெருக்கடியை அப்படியே தொடர்ந்தார். அந்த ஓவரில் ரவீந்திர ஜடேஜா இரண்டு பவுண்டரிகள் மட்டும் அடிக்க, சென்னை அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 26 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது.
வீணடித்த ஜாதவ்
இந்த நிலையில் ரஸல் மீண்டும் கடைசி ஓவரை வீசினார். கொஞ்சம் கூட வெற்றிக்கு முயற்சிக்காத ஜாதவ் முதல் மூன்று பந்துகளை வீணடித்தார். நான்காவது பந்தை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா மெகா சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஜடேஜா. கடைசி பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பிராவோ 150
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ 2 விக்கெட் வீழ்த்தினார். இவர் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் நாகர்கோடி, சிவம் மவி ஆகியோர் அவுட்டாகினர். இதில் மவி விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் அரங்கில் தனது 150ஆவது விக்கெட்டைப் பதிவு செய்து அசத்தினார் பிராவோ. தவிர, டுவைன் பிராவோவின் 37 ஆவது பிறந்தநாளில் இந்த அசத்தல் சாதனையைச் செய்து அசத்தினார் பிராவோ.
வீணான வாய்ப்பு
கொல்கத்தாவின் தொடக்க வீரர் ராகுல் திரிபாதி அருமையாக ஆடியும் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி எதிரணியை 167 ரன்க்ளுக்குள் கட்டுப்படுத்திகார்கள். வாட்சனும் ராயுடுவும் 12ஆவது ஓவர்வரையிலும் நின்று ஆடி வெற்றி வாய்ப்பைப் பிரகாசமாக்கினார்கள். தேவையற்ற ஷாட்டுக்கு ராயுடு அவுட் ஆனார். அடுத்து வந்த மட்டையாளர்களால் தேவைப்பட்ட வேகத்தில் ரன் எடுக்க முடியவில்லை. கொல்கத்தா கேப்டன் கார்த்திக் தன்னுடைய பந்து வீச்சாளர்களைத் திறமையாகப் பயன்படுத்தினார். சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள். ரன் எடுக்கும் முனைப்பை வெளிப்படுத்தாமல் கேதார் ஜாதவ் சொதப்பினார். சென்னை அணி வீழ்ந்தது.
சுருக்கமான ஸ்கோர்:
கொல்கத்தா: 167 (20 ஓவர்கள்)
சென்னை: 157/5 (20 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ராகுல் திரிபாதி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Diya Harini
Contact at support@indiaglitz.com