தோனி பதவி விலகலுக்கு இதுதான் காரணம்… விளக்கம் அளித்த சிஎஸ்கே நிர்வாகம்!

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி திடீரென்று பதவி விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை அடைந்திருக்கும் நிலையில் திடீர் ஓய்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் நிர்வாகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் 15 ஆவது சீசன் போட்டிகள் வரும் 26 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் கேப்டன் கிங் தோனி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதாகும் தோனி சிஎஸ்கே அணி உருவாக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்தே இந்த அணியின் கேப்டனாக பதவி வகித்துவருகிறார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்தப் பதவி வழங்கப்பட்டு இருப்பது குறித்து சிஎஸ்கே அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதாவது தோனி கடந்த சில நாட்களாகவே யோசித்துக் கொண்டிருந்தார். ஜடேஜா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது உச்சத்தில் உள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்த நேரம்தான் அவர் கேப்டன்சி பொறுப்பை ஏற்க சரியானது என தோனி முடிவெடுத்துள்ளார். சென்னை அணியின் எதிர்காலம் குறித்து எப்போதுமே தோனி யோசித்துக்கொண்டே தான் இருப்பார்.

மேலும் கடந்தாண்டே ஜடேஜாவிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டது. தோனிக்கு பின்னர் ஜடேஜா சரியாக இருப்பார். தோனியுடன் அவர் இருந்த அனுபவம் சிஎஸ்கே குறித்த புரிதல், ஆகியவையால் கடந்தாண்டே முடிவு எடுக்கப்பட்டு விட்டது. தோனி அனைத்திற்குமே சரியான நேரத்தைப் பார்ப்பார். முன்னதாக விராட் கோலியிடம்  கேப்டன் பதவியை ஒப்படைத்த தோனி அவருக்கு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் தவறவில்லை. அந்த வகையில் தான் ஓய்வுப் பெறுவதற்கு முன்பே சிஎஸ்கேவிற்கு ஒரு நல்ல தலைமையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது.

ஜடேஜா கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்தே சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தனக்குப் பின் நல்ல தலைமையை உருவாக்க வேண்டும் என்ற தோனியின் விருப்பம் தற்போது ரசிகர்களிடையே புது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.