அடித்து ஆடிய RCB… அசால்ட்டா தட்டித்தூக்கிய சிஎஸ்கே அபார வெற்றி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டிகளின் இரண்டாம் கட்ட போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 35 ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சிஎஸ்கே அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் தல தோனி பேட்டிங்கை தேர்வு செய்யாமல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் படிக்கல் கூட்டணி களம் இறங்கியது. இந்தக் கூட்டணி ஆடிய ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆர்சிபி 200 ரன்களை குவிக்கப் போகிறது எனும் அளவிற்கு பிரமிப்பை வெளிப்படுத்தி வந்தனர். அதுவும் தாகூர் ஓவரில் கோலி அடித்த ஒரு பந்து கிரிக்கெட் பிட்சை தாண்டிப்போன சம்பவம் ரசிகர்களை மிரள வைத்தது.
இந்நிலையில் முதல் விக்கெட்டிற்கு மட்டும் 111 ரன்களை குவித்த ஆர்சிபி பெரும் உற்சாகத்தில் இருந்துவந்தது. இந்நிலையில் கோலி 41 பந்துகளை சந்தித்து 53 ரன்களை எடுத்தபோது பிராவோ ஓவரில் முதல் கேட்சை கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 11 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்த நிலையில் ஷர்துல் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதையடுத்து முதலில் களமிறங்கிய படிக்கல் 50 பந்துகளுக்கு 70 ரன்களை குவித்து பின்பு கேட்ச் கொடுத்து அவுட்டானார். இப்படி முதல் 10 ஓவர்களில் 90 ரன்களை குவித்த ஆர்சிபி அடுத்த 10 ஓவர்களுக்கு வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ஓவர் முடிவில் 156 ரன்களை குவித்திருந்தது. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவிற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது பிராவோதான். அவர் 4 ஓவர்களுக்கு வெறும் 24 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து சென்னை சிஎஸ்கேவை காப்பாற்றி இருக்கிறார்.
இதையடுத்து 157 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சிஎஸ்கே, ஆர்சிபிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலில் இருந்தே அதிரடி காட்ட ஆரம்பித்தது. இதில் ருத்ரவாஜ் கெய்க்வாட் 38 ரன்களும், டுபிளசிஸ் 31 ரன்களையும் எடுத்து தொடக்கத்திலேயே அணியை வலுப்படுத்தி இருந்தனர். அடுத்துவந்த மொயின் அலி 23 ரன்களும் அம்பதி ராயுடு 32 ரன்களும் எடுக்க சென்னை சிஎஸ்கேவின் ரன் ஸ்கோர் படிப்படியாக முன்னேறிக்கொண்டே இருந்தது.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா 20 ரன்களும் தல தோனி 7 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்துகொண்டே வெற்றியை தீர்மானித்தனர். இதனால் 18.1 ஓவர் முடிவில் சிஎஸ்கே 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்து 6 விக்கெட்டு வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் சென்னை சிஎஸ்கே 14 புள்ளிகளைப் பெற்று ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மீண்டும் நெம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இதுவரை சந்தித்த 9 போட்டிகளில் 7 முறை வெற்றிப்பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சிஎஸ்கே இன்னும் ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று 16 புள்ளிகளைப் பெற்றதால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு மாறாக பெங்களூரு அணி இதுவரை தான் சந்தித்த 9 போட்டிகளில் 5 வெற்றியும் 4 தோல்விகளையும் பெற்றுள்ளது. இதனால் 10 புள்ளிகளைக் கொண்டு 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout