'சர்காருக்கு பொங்கியவர்கள் இதற்கு ஏன் பொங்கவில்லை: சி.எஸ்.அமுதன் குமுறல்

  • IndiaGlitz, [Friday,November 09 2018]

'சர்கார்' திரைப்படத்தில் 'கோமளவல்லி என்ற கேரக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலவச திட்டங்களை அவதூறும் செய்யும் வகையில் காட்சிகள் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் அதிமுகவினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். ஒருபக்கம் ஒருசில திரையரங்குகளில் காட்சிகள் ரத்தானாலும், இந்த போராட்டம் படத்திற்கு நல்ல புரமோஷனாகவும் உள்ளது. அப்படி என்னதான் 'சர்கார்' படத்தில் இருக்கின்றது என்று இந்த படத்தை பார்க்க பலரை தூண்டியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து 'தமிழ்ப்படம் 2' இயக்குனர் சி.எஸ்.அமுதன் வித்தியாசமான டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 'தமிழ்ப்படம் 2' படத்தில் ஆட்சியாளர்களை கிண்டல் செய்யும் வகையில் பல காட்சிகள் இருந்தும் அதனை கண்டுகொள்ளாதவர்கள், சர்கார் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருசில காட்சிகளுக்கு இவ்வளவு பெரிய போராட்டம் நடத்தி புரமோஷன் செய்து வருகின்றனர். இதேபோன்று எங்கள் படத்திற்கும் புரமோஷன் செய்திருக்கலாமே! என்று ஆதங்கப்படும் வகையில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

'தமிழ்ப்படம் 2' படத்தில் 'தியானம் செய்வது', 'பதவியேற்கும்போது கண்ணீர்விடுவது' உள்பட பல காட்சிகள் கிண்டலாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தும் அக்கட்சியினர்களிடம் இருந்தும் எந்தவித எதிர்ப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.