திமுகவை ஏன் கலாய்க்கவில்லை: சி.எஸ்.அமுதன் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

சமீபத்தில் வெளியான 'தமிழ்ப்படம் 2' படத்தில் கிட்டத்தட்ட கலாய்க்கப்படாத முன்னணி நடிகர்களே இல்லை என்று கூறலாம். ரஜினி, கமல் படங்கள் முதல் இனிமேல் வெளியாக போகும் 'சர்கார்' வரை கலாய்க்கப்பட்டிருந்தது.

அதேபோல் அரசியல் தலைவர்களும் இந்த படத்தில் தப்பவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் முதல் தேசிய கட்சி ஒன்றின் தமிழக பெண் தலைவர் வரை இந்த படத்தில் கலாய்க்கப்பட்டனர். ஆனால் விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்களின் விமர்சனத்தின்படி இந்த படத்தில் திமுகவை கலாய்க்கும் காட்சிகள் இல்லை என்றும், திமுக பிரமுகர் ஒருவரின் மருமகன் தான் சி.எஸ்.அமுதன் என்பதால் திமுகவை அவர் கலாய்க்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் சி.எஸ்.அமுதன் தற்போது விளக்கமளித்துள்ளார். எனது அரசியல் சித்தாந்தத்தை நான் எனது படத்தில் வைத்திருக்கிறேன் என்று குற்றம்சாட்டினால் அதில் எந்தத் தவறும் இல்லை. அது எனது தனிப்பட்ட உரிமை. சார்லி சாப்ளினிலிருந்து ரஞ்சித் வரை ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் படங்களில் அவரவரது அரசியல் சித்தாந்தத்தை பேசியுள்ளனர்' என்று கூறியுள்ளார்.

தமிழ் படம் 2 கதையை அரசியல் சித்தாந்தமும் பின்னிருந்து இயக்கவில்லை என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். மேலும் ஒருவர் மீது மென்மையாகவோ, வன்மையாகவோ நடந்து கொள்ள நான் அரசு வக்கீல் இல்லை. பிரபல திரைப்படங்களை பற்றிய குறியீடுகள் எளிதில் புரிபவை, கதைக்கு எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன' என்று கூறியுள்ளார்.