சென்னையில் மேலும் ஒரு காவலர் தற்கொலை
- IndiaGlitz, [Saturday,June 02 2018]
சமீபகாலமாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஒரு காவலரும், அயனாவரம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவலரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜோசப் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
காவலர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தமே இந்த தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது. இதனால் அவ்வப்போது காவலர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள பூந்தமல்லியிலுள்ள பயிற்சி மையத்தில் ராஜேஷ்குமார் என்ற சிஆர்பிஎப் வீரர் சற்றுமுன் தற்கொலை செய்து கொண்டார். ராஜேஷ்குமார் ஹரியானாவை சேர்ந்தவர் என்றும் இவருடைய மேலதிகாரி இவருக்கு வழங்கிய தண்டனையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.