நாங்கள் வேலையில்லாதவர்களா? சித்தார்த் குற்றச்சாட்டுக்கு சிஆர்பிஎப் வீரர் பதில்!

  • IndiaGlitz, [Thursday,December 29 2022]

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்தியில் பேசி துன்புறுத்தினார்கள் என நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இதற்கு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த்தின் பெற்றோர்கள் சமீபத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அவர்களை சோதனை செய்த சிஆர்பிஎஃப் அதிகாரிகள் ஹிந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தினார்கள் என்றும் ஆங்கிலத்தில் பேசுமாறு தான் கூறிய போதிலும் அவர்கள் தொடர்ந்து இந்திய பேசிக் கொண்டிருந்தார்கள் என்றும் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது பெற்றோர்கள் வைத்து இருந்த சில்லரை காசுகளை எடுத்து காட்டும்படி சிஆர்பிஎஃப் வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள் என்றும் ஒரு வயதானவர்களை இப்படியா நடத்துவது என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் வேலை இல்லாதவர்களின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும் அவர் பதிவு செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டுக்கு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். அதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் எந்த ஒரு இந்திய மொழிகளிலும் பேசலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்களுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி தெரிந்துள்ளதோ, அந்த மொழியில் நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் வெள்ளைக்காரனின் ஆங்கில மொழியை நாங்கள் பேச வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் விமான பயணிகளை சோதனை செய்வது அவர்களது கடமை என்றும் சிஆர்பிஎஃப் வீரர்களின் பெற்றோர்களே வந்தால் கூட அவர்களையும் சோதனை செய்துதான் அனுப்புவார்கள் என்றும் எனவே தங்களது கடமையை செய்யும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது சித்தார்த் குற்றம்சாட்டி பேசியது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் வேலை இல்லாதவர்கள் கிடையாது என்றும் எங்களுடைய கடமையை நாங்கள் செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.