நட்புக்காக அண்ணன்களாக மாறிய இராணுவ வீரர்கள்… திருமணத்தில் நெகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,December 16 2021]

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமணவிழா ஒன்றிற்கு எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் பலர் கூட்டமாக அதுவும் சீருடையில் கலந்து கொண்ட சம்பவம் புது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மணப்பெண்ணிற்கு அந்த வீரர்கள் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து சடங்குகளைச் செய்தது மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் சிக்கி சைலேந்திர பிரதாப் சிங் எனும் எல்லைப் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர் உயிரிழந்தார். அவருடைய தங்கை ஜெயாவின் திருமணம் கடந்த 13 ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவிற்கு சைலேந்திர பிரதாப் சிங்குடன் பணியாற்றிய 110 ஆவது பட்டாலியன் வீரர்கள் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் தங்கை ஜெயாவிற்கு அண்ணனாக இருந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைத்து சடங்குகளையும் செய்தது பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. இதனால் அந்த திருமண விழாவிற்கு வந்த அனைத்து விருந்தினர்களும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களை நினைத்து உற்சாகத்தில் மிதந்ததோடு சைலேந்திர பிரதாப் சிங்கை நினைத்து பெருமை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.