கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

அமெரிக்காவில் மினியா போலீஸ் நகரத்திற்கு அருகே உள்ள புரூக்ளின் நகரில் டான்ட் ரைட் என்ற 20 வயதே ஆன இன்னொரு கறுப்பின இளைஞர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீஸார் அளித்துள்ள விளக்கத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக டான்ட் ரைட்டை கைது செய்ய முயற்சித்ததாகவும் இந்தக் கைது நடவடிக்கையின்போது ஒத்துழைப்புத் தராத டான்ட் மீண்டும் காருக்குள் ஏற முயற்சித்தபோது அவரைத் தடுக்கும் விதமாக அருகில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி டான்ட் ரைட்டை சுட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும் இந்தக் கைது நடவடிக்கையின்போது துப்பாக்கிச் சூடு பட்ட டான்ட் ரைட் சிறிது தூரம் காரை ஓட்டிச்சென்று மற்றொரு வாகனத்தின்மீது மோதியுள்ளார். மேலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அதோடு டான்ட் ரைட் ஓட்டிச் சென்ற அந்தக் காருக்குள் அவரது தோழியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. கார் மற்றொரு வாகனத்தின்மீது மோதியதால் அந்தப் பெண்ணிற்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவத்தினால் புருக்ளினில் மீண்டும் போராட்டம் வெடித்து இருக்கிறது.

அமெரிக்காவின் மினியா போலீஸ் நகரில் கடந்த ஆண்டு ஜார்ஜ் ப்ளாய்ட் எனும் கறுப்பின இளைஞர் கைது நடவடிக்கையின்போது கழுத்து நெறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உலக நாடுகள் முழுக்க போராட்டங்கள் வெடித்தன. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இந்தச் சம்பவம் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் மினியா போலீஸ் பகுதிக்குள் 19 வயதே ஆன கறுப்பின இளைஞர் கைது நடவடிக்கையின்போது சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் போராட்டத்திலும் தற்போது வன்முறைகள் வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. மேலும் அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரம் பெற்றிருப்பதால் மாலை நேர ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றன.