கொரோனாவால் தாயையும் சகோதரியையும் இழந்துவிட்டேன்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதனை!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் பலியாகி வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவரான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் மற்றும் சகோதரி கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுகுறித்து வேதா கிருஷ்ணமூர்த்தி உருக்கத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவை படிக்கும்போதே கண்ணீர் வரும் அளவுக்கு உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக எங்களுக்கு மிகவும் துயரமான நாட்கள். என்னுடைய அம்மா அக்கா ஆகிய இருவரும் என்னை விட்டுப் பிரிந்து விடுவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. என்னுடைய இதயத்தை அது நொறுக்கிவிட்டது.

அம்மா நீங்கள் எங்களை மிகவும் தைரியமான பெண்ணாக வளர்த்தீர்கள். பல விஷயங்களை கற்றுக் கொடுத்தீர்கள். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பதை உங்களிடம் இருந்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். நீங்கள் மிகவும் அழகான, சந்தோஷமான, தன்னலமற்ற ஒரு நபர். உங்களைப் போல் நான் இதுவரை யாரையும் பார்த்தது இல்லை அக்கா நீங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான நபர். நீங்கள் ஒரு போராளி, உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் இரண்டு பேரும் என்னுடைய ஒவ்வொரு செயலையும் ரசித்து மகிழ்ந்தீர்கள். எனக்கு இரண்டு அம்மாக்கள் இருக்கிறார்கள் என்று நான் மிகவும் பெருமிதமாக இருந்தேன். இப்போது அவர்கள் இருவரையும் நான் இழந்து விட்டேன். கொரோனா அவர்களை பலிகொண்டுவிட்டது.

எனவே தயவுசெய்து அனைவரிடம் நான் வேண்டி தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை சரியாக கடைபிடியுங்கள். இவ்வாறு வேதா கிருஷ்ணமூர்த்தி உருக்கத்துடன் கூறியுள்ளார்.