விஜய் சேதுபதி விலகிய முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம்.. யார் நடிக்கிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

இலங்கை முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் முயற்சிகள் நடந்த போது அதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்க கூடாது என விஜய் சேதுபதிக்கு பல முக்கிய திரை உலக பிரபலங்கள் வேண்டுகோள் கொடுத்ததை அடுத்து அந்த படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மதுர் மிட்டல் என்பவர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பாலிவுட்டில் ‘மைதான்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி என்பவர் இயக்க இருப்பதாகவும் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரவீன் கேஎல் பட தொகுப்பில் உருவாக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து இந்த படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மதுமிட்டல், மஹிமா நம்பியார், நரேன்,நாசர்,வேலராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.